தெரு நாய்கள் பாவம் இல்லையா? சென்னையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணி…
தெரு நாய்களை சிறைபிடிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேரணி நடைபெற்றது.
இந்தியாவில் தெரு நாய்கள் தொடர்பான பிரச்சினைகள் நீண்ட காலமாக பொது விவாதத்திற்கு உட்பட்டவை. குறிப்பாக, தெரு நாய்களின் தாக்குதலால் குழந்தைகள், முதியோர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவது, ரேபிஸ் நோய் பரவுதல், சாலை விபத்துகள் போன்றவை தொடர்ந்து புகார்களாக எழுந்து வந்துள்ளன. இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 11அன்று டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலப் பகுதிகளில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவும் பிறப்பிக்கப்பட்டது.
அனைத்து தெரு நாய்களையும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உள்ளவற்றை, 8 வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். போதுமான பணியாளர்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு உள்ள காப்பகங்களை உடனடியாக அமைக்க வேண்டும். இந்தக் காப்பகங்களில் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செய்யப்பட வேண்டும். கருத்தடை செய்யப்பட்ட பிறகு நாய்களை மீண்டும் தெருக்களில் விடுவிக்கக் கூடாது.
இது முந்தைய விலங்கு கருத்தடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு மாறாக உள்ளது. தெரு நாய்களைப் பிடிக்கும் செயல் முறையைத் தடுக்கும் தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொடர்பான புகார்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஹெல்ப்லைன் அமைக்கப்பட வேண்டும். அதிகாரிகள் இந்தப் புகார்களுக்கு நான்கு மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். ரேபிஸ் தடுப்பூசிகளின் இருப்பு மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விரிவான அறிக்கையை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினங்கள்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிரியங்கா காந்தி விமர்சனம்..!!
இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பரவலான ஆதரவைப் பெற்ற போதிலும், விலங்கு நல ஆர்வலர்கள், சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெரு நாய்களை சிறைபிடிக்கும் உத்தரவை எதிர்த்து சென்னையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர். சென்னை புதுப்பேட்டையில் இருந்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் வரை 500க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். நாய்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாக்களை எழுதியவாறு பேரணி நடத்தினர்.
இதையும் படிங்க: தெருநாய்களை பிடிக்க 8 வாரம் தான் டைம்.. அதிரடி ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட்..!!