SIR சர்ச்சையில் புதிய திருப்பம்! ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கு! அடுத்த வாரமே விசாரணை! உச்ச நீதிமன்றம் அதிரடி!
இந்த மனு குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
புதுடெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடவடிக்கையில் தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை தொடர்பாக இந்த மனுவில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
வழக்கறிஞர் ராகேஷ் குமார் சிங் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் நிவாரணம் கோரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 2025 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், SIR மற்றும் தேர்தல் தொடர்பான சில முடிவுகள் குறித்து குறைந்தது 14 முறை எதிர்ப்புகளை பதிவு செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: SIR விவகாரம் விஸ்வரூபம்! ஞானேஷ் குமாரை குறிவைக்கும் காங்கிரஸ்! கார்கே கூட்டிய அவசர கூட்டம்!
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள கூட்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியதாக கூற முடியுமா என்பது குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.
மேலும், ஞானேஷ் குமார் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் முடிவுகளை மேற்கொண்டார் என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை நடைபெறும் வரை ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக செயல்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை ஆணையம் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே முக்கிய முடிவுகளை கூட்டு முறையில் எடுப்பதுதான் என அவர் வாதிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டவை அல்ல. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மற்றும் SIR தொடர்பான முடிவெடுக்கும் நடைமுறை குறித்து அடுத்தகட்ட விசாரணையில்தான் நீதிமன்றம் பரிசீலிக்கும்.
இதையும் படிங்க: ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?