நீட் தேர்வு மோசடி.! வினாத்தாள் கசிவு.. ஆள்மாறாட்டம்.. இப்படிலாம் நடக்குதா பிராடுதனம்!
நாடு முழுதும், 'நீட்' நுழைவுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் தருவதாக கூறி, 40 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாகும்.இத்தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுக்கு ஒருமுறை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. மருத்துவம் படிக்க விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை வழக்கு தொடரப்பட்டது. வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டு, விசாராணை மேற்கொள்ளப்பட்டது. அதே நேரம், வினாத்தாள் மாற்றி வழங்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில், இந்தாண்டு நீட் தேர்வு ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓம்எம்ஆர் முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உயிர்க்கொல்லி நீட் எப்போது ஒழியும்? என்ன திட்டம் வச்சு இருக்கீங்க? அன்புமணி கேள்வி..!
எனினும், நீட் தேர்வு மோசடிகள், முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு வினாத்தாள் உள்ளதாக கூறும் சமூக வலைத்தள பக்கங்கள், அங்கீகரிக்கப்படாத இணையதளம், தனிநபர் மற்றும் தேசிய தேர்வு முகமை அல்லது அரசு அதிகாரிகள் போல் போலியாக அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் குறித்து இந்த இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு குறித்த புகார்களுக்கு https://neet.nta.nic.in/ மற்றும் https://www.nta.ac.in/ என்ற இணையதளங்களில் நேரடியாக, உரிய ஆதாரங்களுடன் அளிக்க வேண்டும். புகார்கள் முறையாக பரிசீலிக்கப்பட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியது.
2025-ம் ஆண்டு நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று ஒரே கட்டமாக பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இதனிடையே ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கான வினாத்தாளை 40 லட்சம் ரூபாய்க்கு தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு எழுதும் மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட மூன்று பேர் அடங்கிய குழு, தேர்வுக்கான வினாத்தாளை தருவதாக கூறி, அவர்களை குருகிராமிற்கு வர சொல்லியது.
இதை நம்பி சென்றவர்களிடம், அவர்கள் 40 லட்ச ரூபாய் பணம் கேட்டு உள்ளனர். வினாத்தாளை காண்பித்தால் பணம் தருவதாக மாணவர் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு அவர்கள் மூவரும் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, சந்தேகமடைந்த மாணவரின் குடும்பத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மோசடியில் ஈடுபட்ட பல்லான் (வயது 27), முகேஷ் மீனா (வயது 40), ஹர்தாஸ் (வயது 38), ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களின் பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, மருத்துவ கல்லுாரிகளில் இடம் வாங்கி தருவதற்கு லஞ்சம் பெற்ற நான்கு பேரை ஒடிஷா போலீசார் கைது செய்தனர். ஒடிஷாவைச் சேர்ந்த இருவரையும், ஜார்க்கண்ட், பீஹாரைச் சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் உள்ளூர் நபர்களின் உதவியுடன் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள், அவர்களின் ஆதார் அட்டை போன்றவற்றை பெறும் இந்த கும்பல், போலியாக ஹால் டிக்கெட்டை தயாரித்து, தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ய முயன்றது தெரிந்தது.
இதையும் படிங்க: தொடரும் நீட் சோகம்! தேர்வு பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி...