×
 

தமிழக தேர்தலில் வரலாற்று சாதனை! மாலை 6 மணி நிலவரப்படி 84.35% வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் மாலை 6 மணி நிலவரப்படி தோராயமாக 84.35% வாக்குகள் பதிவு. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.86% வாக்குகள் பதிவு.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் இதுவரை கண்டிராத வகையில் 84.35 சதவீத வாக்குகள் பதிவாகிப் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 1952-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இதுவே மிக அதிகமான வாக்குப்பதிவு சதவீதமாகும்.

தமிழகம் முழுவதும் தோராயமாக 84.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது. டோக்கன் பெற்று வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், இறுதி நிலவரம் இன்னும் ஒரு சில சதவீதம் உயர வாய்ப்புள்ளது.

வாக்குப்பதிவு சதவீதத்தில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் வழக்கம் போல முன்னிலை வகிக்கின்றன. கரூர் மாவட்டம் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 91.86 சதவீத வாக்குகள் பதிவாகிப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, தருமபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும் 85 சதவீதத்தைத் தாண்டி அசத்தியுள்ளன.

இதையும் படிங்க: தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு! 1952 சாதனையை முறியடித்தது 2026 தேர்தல்!

தேர்தல் ஆணையத்தின் '100% வாக்குப்பதிவு' விழிப்புணர்வு மற்றும் வெயிலுக்கு முன்பே வாக்களிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோள் பலன் அளித்துள்ளது. தவெக உள்ளிட்ட புதிய கட்சிகளின் வரவு மற்றும் இளைஞர்களின் எழுச்சி இந்த முறை வாக்குப்பதிவு சதவீதத்தை எகிற வைத்துள்ளது. மதியம் 1 மணிக்கே 56% மற்றும் 3 மணிக்கே 70% என வாக்குப்பதிவு வேகம் எடுத்தது இமாலய இலக்கை எட்ட உதவியது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு (Strong Rooms) கொண்டு செல்லப்பட்டு, அங்கே மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட உள்ளது.

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் இந்தத் தீர்ப்பு, மின்னணு இயந்திரங்களில் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டுள்ளது. வரும் மே மாதம் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இந்தத் தேர்தல் காய்ச்சல் தமிழகத்தில் நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: வித்தியாசமான தேர்தல்.. மக்கள் ஆர்வமா இருக்காங்க! சென்னையில் வாக்களித்த பிறகு நடிகர் சிம்பு, வடிவேலு பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share