×
 

‘நீட்’ எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு.. நாளை நுழைவுத் தேர்வு..!! முக்கிய விதிமுறைகள் வெளியீடு..!!

தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

மருத்துவத் துறையில் கனவு காணும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு நாளை (மே 3, ஞாயிறு) மிக முக்கியமான நாள். 2026-27 கல்வியாண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் (NEET UG 2026) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 22.80 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத இருப்பது இந்த ஆண்டின் சிறப்பம்சமாகும். இந்த எண்ணிக்கை மருத்துவக் கனவுகளின் உயர்வையும், போட்டியின் தீவிரத்தையும் பிரதிபலிக்கிறது.

மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை (3 மணி நேரம் 20 நிமிடங்கள்) நடைபெறும் இந்தத் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து மொத்தம் 180 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். 

மொத்தம் 720 மதிப்பெண்கள்க்கு தேர்வு நடைபெறுகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு எழுதும் வசதி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.தேர்வை சீராக நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. தேர்வு மையங்களில் பல அடுக்குச் சோதனைகள் மேற்கொள்ளப்படும். 

இதையும் படிங்க: இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

தேர்வர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தேர்வு மையத்தை முன்கூட்டியே அடையும் வகையில் பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறு NTA அறிவுறுத்தியுள்ளது. கூகுள் மேப்ஸை மட்டும் நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரைகள்:

  • தண்ணீர் பாட்டில்கள் ஒளிபுகும் (டிரான்ஸ்பரன்ட்) வகையில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • மத நம்பிக்கை சார்ந்த அடையாளங்கள் அணியலாம். ஆனால் சோதனைக்கு ஒத்துழைக்க முன்கூட்டியே வர வேண்டும்.
  • சாதாரண, லேசான ஆடைகளை அணியுமாறு பரிந்துரை. தேவைப்பட்டால் முழுக்கை அல்லது கம்பளி ஆடைகளை அணியலாம். அவற்றையும் சோதனைக்கு உட்படுத்த நேரம் ஒதுக்க வேண்டும்.
  • குறைந்த உயர செருப்புகள் அல்லது சாதாரண காலணிகளை அணியலாம். உயரமான ஹீல்கள் மற்றும் கனமான அணிகலன்களைத் தவிர்க்கவும்.
  • நீலம் அல்லது கருப்பு பால்பாயிண்ட் பேனா பயன்படுத்த வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான சான்றிதழ்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.
  • கணக்கீடுகளுக்கு வினாத்தாளில் ஒதுக்கப்பட்ட இடங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
  • தேர்வு முடிந்ததும் OMR விடைத்தாளை ஒப்படைத்த பின்னரே வெளியேற வேண்டும்.

இந்த ஆண்டு NTA முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அமைதியாக, திட்டமிட்டு தேர்வு மையத்தை அடையுமாறு பெற்றோர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த ஒரு தேர்வு லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் மிக முக்கியம்.வெற்றிக்கான இறுதி நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! அமைதியாக, நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: இன்று இல்லை..!! நாளை வெளியாகிறது NEET UG 2026 ஹால் டிக்கெட்..!! NTA அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share