×
 

காசாவுக்கு பாக்., படையை அனுப்புங்க! அழுத்தம் தரும் ட்ரம்ப்! உள்நாட்டு எதிர்பால் கையை பிசையும் அசிம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் தருவதால், பாக்., முப்படைகளின் தளபதி அசிம் முனீருக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 20 அம்ச காசா அமைதித் திட்டத்தில் சர்வதேச நிலைத்தன்மைப் படை (ஸ்டெபிலைசேஷன் ஃபோர்ஸ்) அமைக்கும் திட்டம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து விலக்கப்பட்ட பிறகு, முஸ்லிம் நாடுகளின் படைகள் அங்கு பொறுப்பேற்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்தத் திட்டத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுக்கொண்ட நிலையில், அதன் அடுத்த கட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் முப்படைத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டிரம்புடன் நெருக்கமான உறவைப் பேணி வரும் முனீர், விரைவில் அமெரிக்கா சென்று டிரம்பை சந்திக்க உள்ளார். 

இது ஆறு மாதங்களில் அவர்களது மூன்றாவது சந்திப்பு ஆகும். இந்தச் சந்திப்பில் காசா நிலைத்தன்மைப் படைக்கு பாகிஸ்தான் படைகளை அனுப்ப வேண்டும் என்ற அழுத்தம் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தனிமையில் அடைத்து சித்திரவதை! கொலை செய்ய முயற்சி!! கண்ணீர் விடும் இம்ரான்கான்!

பாகிஸ்தான் அரசு அமெரிக்க முதலீடு மற்றும் ராணுவ உதவிகளை எதிர்பார்க்கும் நிலையில், டிரம்பின் கோரிக்கையை மறுத்தால் உறவுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. அதேநேரம், ஹமாஸை ஆயுதமற்றதாக்கும் பணியில் பங்கேற்பது பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இம்ரான் கானின் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை “இஸ்ரேலுக்கு உதவுவது” என்று குற்றம்சாட்டி போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் ஏற்கனவே, ஹமாஸை ஆயுதமற்றதாக்குவது பாகிஸ்தானின் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், சமீபத்தில் முனீர் இந்தோனேஷியா, மலேஷியா, சவுதி அரேபியா, துருக்கி, ஜோர்டான், எகிப்து, கத்தார் போன்ற முஸ்லிம் நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தது இந்தத் திட்டம் குறித்த ஆலோசனையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அசிம் முனீர் சமீபத்தில் பதவி நீட்டிப்பு, வாழ்நாள் ஃபீல்டு மார்ஷல் பட்டம், குற்ற விலக்கு உள்ளிட்ட சலுகைகளைப் பெற்றுள்ளார். இதனால் ராணுவ முடிவுகளில் அவருக்கு அதிக சுதந்திரம் உள்ளது. இருப்பினும், உள்நாட்டு அரசியல் அழுத்தமும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் அவரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளன.

இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மேடையில் அத்துமீறிய முதல்வர்!! அரசுப்பணியை உதறித்தள்ளிய பெண் டாக்டர்! பீகாரில் சர்ச்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share