மேடையில் அத்துமீறிய முதல்வர்!! அரசுப்பணியை உதறித்தள்ளிய பெண் டாக்டர்! பீகாரில் சர்ச்சை!
பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், சர்ச்சையில் சிக்க காரணமான முஸ்லிம் பெண் டாக்டர், கடும் மன உளைச்சலில் இருப்பதால் அரசு பணியில் சேர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரிடம் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பெண் டாக்டர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அரசு பணியில் சேர்வதை மறுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்னாவில் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி 1,283 ஆயுஷ் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 10 டாக்டர்களுக்கு நேரடியாக ஆணைகளை வழங்கினார். அப்போது நுஸ்ரத் பர்வீன் என்ற இளம் பெண் டாக்டர் ஹிஜாப் அணிந்து வந்தார். முதல்வர் நிதிஷ் குமார் அவரது ஹிஜாபை விலக்குமாறு சைகை செய்தார். பின்னர் அனுமதி கேட்காமலேயே ஹிஜாபை விலக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும் பெரும் சர்ச்சை வெடித்தது.
எதிர்க்கட்சிகள் இதை பெண்களின் உரிமை மீறல் என்று கடுமையாகக் கண்டித்தன. முதல்வரின் செயல் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சர்ச்சைக்கு பிறகு நுஸ்ரத் பர்வீன் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: 75 வயசுல முதல்வர் பண்ணுற காரியமா இது? மேடையில் பெண் டாக்டருக்கு நேர்ந்த சங்கடம்!
நுஸ்ரத் பர்வீன் தற்போது மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அரசு ஆணைப்படி நாளை (டிசம்பர் 20) பீஹார் அரசு பணியில் சேர வேண்டும். ஆனால் ஹிஜாப் விவகாரம் பெரிதானதால் அவர் பணியில் சேர மறுத்துள்ளதாக அவரது சகோதரர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
“என் சகோதரி அரசு பணியில் சேர வேண்டாம் என்று உறுதியாக உள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரை சமாதானப்படுத்தி வருகிறோம். மற்றவரின் தவறுக்கு ஏன் நீ பாதிக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறோம்” என்று அவர் கூறினார். இருப்பினும் நுஸ்ரத் பர்வீன் இன்னும் முடிவை மாற்றவில்லை என்று தெரிகிறது.
இந்தச் சம்பவம் பீஹார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் மத சுதந்திரம், தனிநபர் உரிமை உள்ளிட்ட விவாதங்களைத் தூண்டியுள்ளது. நிதிஷ் குமார் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: 20 வருஷம் நிதிஷ் கட்டிக்காப்பாற்றிய துறை!! தட்டிப்பறித்த பாஜக!! பீகார் அமைச்சரவையில் அதிரிபுதிரி!