×
 

1 சவரன் தங்கம் + பட்டுப்புடவை..!! தவெக அரசின் "அண்ணன் சீர்" திட்டம் விரைவில் தொடக்கம்..!!

அண்ணன் சீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த தீவிரமாக ஆலோசனைகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அரசு, ஏழை மகளிரின் திருமணச் செலவுகளை குறைக்கும் வகையில் 'அண்ணன் சீர்' திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது. தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்ற இந்தத் திட்டம், திருமணம் செய்துகொள்ளும் ஏழைப் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப் புடவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்தத் திட்டத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை அறிக்கை வெளியீட்டுக்குப் பின்னரே திட்டத்தின் முழு வடிவம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாநிலத்தின் பொருளாதார நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட தவெக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் நிதி சுமையை புரிந்துகொண்டு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் கூறுகையில், “மணப்பெண்களின் நலன் முக்கியம். ஆனால் தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சில மாற்றங்களுடன் திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர். 

இதையும் படிங்க: "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

தங்கத்தின் அளவு 8 கிராமாகவே நீடிக்கலாம் அல்லது சற்று குறைக்கப்படலாம். பட்டுப் புடவைக்கு பதிலாக உயர் தரமான புடவை வழங்கும் யோசனையும் பரிசீலிக்கப்படலாம். வருமான வரம்பு ₹5 லட்சமாகவே தொடரலாம் அல்லது சற்று அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தை செயல்படுத்த தனி இணையதளம் உருவாக்கப்படலாம் அல்லது மாவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்படலாம். வரவிருக்கும் முதல் பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் இந்தத் திட்டத்தை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. 

முதல் கட்டமாக சில மாவட்டங்களில் தொடங்கி, பின்னர் முழு மாநிலத்துக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருமணச் செலவுகள் அதிகரித்துள்ள இன்றைய சூழலில், கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பெரும் நிம்மதியைத் தரும் என பலர் வரவேற்கின்றனர். தவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின்போது “எங்கள் மகள்கள் அனைவரும் பொன் நகையுடன் மணமுடிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்துக்கான ஆண்டு செலவு ₹800 கோடி முதல் ₹1,200 கோடி வரை இருக்கலாம் என முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. வெள்ளை அறிக்கைக்குப் பின் தகுதி நிபந்தனைகள், செயல்படுத்தும் முறை உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்திட்டம் ஏழைப் பெண்களின் திருமணப் பிரச்சனைகளுக்கு நீண்டகால தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share