களத்தில் குதித்த விக்டர் ஃபோர்ஸ்! ஜம்மு காஷ்மீரில் அதிரடி! 2 பயங்கரவாதிகள் கதைமுடிப்பு!
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாத சந்தேக நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு அமைப்புகளுக்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், ஷோபியான் பகுதியில் ஆயுதம் ஏந்திய நபர்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம், போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து அப்பகுதியை முழுமையாக சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையை தொடங்கினர்.
அப்பகுதியில் அடர்ந்த காடுகள் மற்றும் தடிமனான மரங்கள் அதிகம் இருப்பதால், யாரும் தப்பிச் செல்ல முடியாத வகையில் ராணுவத்தின் சிறப்புப் பிரிவான விக்டர் ஃபோர்ஸ் கூடுதலாக களமிறக்கப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின்போது மறைந்திருந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததில் இருவர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கேட்பாரற்று கிடக்கும் ரூ.9,300 கோடி! செயல்படாத 31 லட்சம் PF கணக்குகள்! உரிமைகோர ஆளில்லை!
உயிரிழந்த இருவரும் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தைபா அமைப்புடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவர்களில் ஒருவர் ஜாகிர் அகமது கானி என்றும், மற்றொருவர் லத்தீஃப் பட் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைப்புகளின் முதற்கட்ட தகவலின்படி, ஜாகிர் அகமது கானி கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் ஆயுதக் குழுவுடன் இணைந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், பயங்கரவாதம் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நீதிமன்றத்தில் தேடப்பட்டு வந்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதல் தொடர்பாகவும் அவரது தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பவ இடத்தில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் மேலும் ஒருவரின் நடமாட்டம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஷோபியான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் பாதுகாப்பு அமைப்புகள், தேடுதல் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: இந்தியாவை சீரழிக்க சதி! பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு! குஜராத்தில் 8 பேர் கைது!