BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் முயற்சியைத் முறியடித்த ரஷ்ய வான் பாதுகாப்புப் படை, ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 91 உக்ரைனிய ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது. புடினைப் படுகொலை செய்ய உக்ரைன் முயல்வதாகவும், இதனால் இனி பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், இது ஒரு புனையப்பட்ட கதை என்றும் விமர்சித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வீட்டைத் தாக்க உக்ரைன் சதி செய்ததாக ரஷ்யா இன்று பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “அதிபர் புடின் தங்கியிருக்கும் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் 91 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதனை எங்களது வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்து, அனைத்து ட்ரோன்களையும் அழித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!
இந்தத் தாக்குதல் முயற்சியால் யாருக்கும் எவ்வித காயமோ அல்லது கட்டிடச் சேதமோ ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட லாவ்ரோவ், இத்தகையத் தாக்குதல் முயற்சிகளால் உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் ரஷ்யாவின் தற்போதைய நிலைப்பாடு இனி மறுபரிசீலனை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஸ்கோ நகரின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ட்ரோன்கள் ஏவப்பட்டது ரஷ்யப் பாதுகாப்பு வட்டாரத்தில் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
மறுபுறம், ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உக்ரைன் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “ரஷ்ய அதிபர் புடின் வீடு மீது நாங்கள் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை; செர்ஜி லாவ்ரோவ் கூறுவது முற்றிலும் பொய்யானத் தகவல்” என உக்ரைன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தனது அடுத்தகட்டத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதற்காகத் திட்டமிட்டே இத்தகையப் பொய்ப் பிரச்சாரங்களைச் செய்வதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் சாடியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த நேரடி மோதல் போக்கு, மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: "ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும்" - ட்ரம்ப் எச்சரிக்கை!