எனது அலுவலகத்தையே தரேன்; போர் வேண்டாம்... ஐநா பொதுச்செயலாளர் அட்வைஸ்!!
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் ராணுவ மோதலை தவிர்ப்பது அவசியம் என ஐநாவின் பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டெரஸ் அறிவுறுத்தியுள்ளார்.
காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தத் தாக்குதலால் காஷ்மீரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் நம் நாட்டின் பதிலடி தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் ஐநா சபைக்கு ஓடியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் பற்றி ஐநா மன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. அதேபோல் தேவைப்பட்டால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்த விஷயத்தை தேவைப்பட்டால் கையில் எடுக்கும் என்று அறிவித்து இருந்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை செய்ய உள்ளது.
இதையும் படிங்க: இதை சொன்னால் மதவாதமா? பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் கேள்வி!!
இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் தாக்குதல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து ஐநாவின் பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டெரஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இந்த பதற்றம் என்பது உச்சத்தில் உள்ளது. இரு நாடுகளின் அமைதிக்காகவும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் என்பது வேதனை அளிக்கிறது. இப்போது அதிகபட்ச நிதானத்தில் இருந்து பின்வாங்கும் நேரத்தை இருநாடுகளும் கடைப்பிடிக்கின்றன. இருநாடுகளுடன் நான் தொடர்ந்து பேசியதில் கிடைத்த பதில் தான் இது. பஹல்காம் தாக்குதலை நான் மீண்டும் ஒருமுறை வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இந்த காலக்கட்டத்தில் ராணுவ மோதலை தவிர்ப்பது அவசியம். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த தயாராக இருக்கிறேன். இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையை வளர்ப்பது, பதற்றங்களை குறைப்பது, அமைதிக்கான தீர்வை அடைவதற்கான எந்த முயற்சியையும் ஆதரிக்க ஐநா தயாராக உள்ளது. யாரும் தவறு செய்யக்கூடாது. பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை என்பது தீர்வு இல்லை. அமைதி பேச்சுவார்த்தைக்காக நான் எனது அலுவலகத்தை இருநாடுகளின் அரசுகளுக்கும் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லையில் தொடரும் பதற்றம்... சுத்துப்போட்டு தூக்கப்பட்ட பாகிஸ்தான் ரேஞ்சர் !!