×
 
☰

'ரீல்ஸ் போடுவதில் மட்டுமே கவனம்...': தவெக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

முன்னெச்சரிக்கை திட்டமிடல் இல்லாமல் ரூ.35-க்கு மின்சாரம் வாங்கி மின்வாரியத்தைக் கடனில் மூழ்கடித்துள்ள தவெக அரசு எந்த மாநிலத்தையும் ஆளத் தகுதியற்றது என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற கொள்ளை விலைக்குத் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதற்கு பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்; "நிர்வாக அலட்சியத்தின் விளைவாகக் கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கும் தவெக அரசு, எந்தவொரு மாநிலத்தையும் ஆளத் தகுதியற்றது" என்று அவர் ஆவேசமாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பிரச்சனை மற்றும் ரூ.35 மின் கொள்முதல் விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசார அறிக்கை:

"தமிழகத்தின் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற கூடுதல் விலைக்குத் தவெக அரசு கொள்முதல் செய்யப்போவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. பருவநிலை மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசி வரும் சூழலில், ஒட்டுமொத்த தமிழகத்தின் மின் தேவையானது சுமார் 21,000 மெகாவாட்டுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதேவேளையில், தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தியும் பெருமளவில் குறைந்துள்ளது.

இதையும் படிங்க: நிர்மல் குமார் நிர்வாகத்தில் தடுமாறும் மின்சாரம்.. பகலிலும் பவர்கட்! தமிழக மக்கள் அவதி!!

இத்தகைய சூழலில், ஒவ்வொரு மாதத்தின் மின் தேவையையும் முன்கூட்டியே தொலைநோக்குப் பார்வையுடன் கணக்கிட்டு, அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்வதில் அரசு முழு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சரியான திட்டமிடலுடன், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை அரசு முன்னரே துரிதப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், தமிழக முதல்வர் விஜய் அவர்களோ 'முருங்கைக்காய்' பறிப்பதிலும், 'டிராக்டர்' ஓட்டுவதிலும், சமூக வலைதளங்களில் 'Reels' போடுவதிலும் மட்டுமே தனது முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறார். மக்களின் அடிப்படைத் தேவையை இவ்வாறு அப்பட்டமாக அலட்சியப்படுத்தியதன் நேரடி விளைவுதான், இன்று கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.35 வரை அநியாய விலை கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க அண்டை மாநிலமான ஆந்திர அரசு யூனிட்டுக்கு வெறும் ரூ.16 முதல் ரூ.20 வரை மட்டுமே செலவிடும் நிலையில், தனது நிர்வாக அலட்சியத்தால் தமிழக மின்வாரியத்தின் மீது பெரும் கடன் சுமையை இழுத்துவிட்டுள்ள தவெக அரசு, எந்த ஒரு மாநிலத்தையும் ஆளத் தகுதியற்றது!" என்று நயினார் நாகேந்திரன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

 

 

 

இதையும் படிங்க: தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share