ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!
ஈரானிலிருந்து மருத்துவ உதவிகள் பெற இந்தியா வரவிருந்த விமானத்தை வான்வழித் தாக்குதல் மூலம் அமெரிக்கா தாக்கியுள்ளது.
தெஹ்ரான்: ஈரானில் இருந்து மருத்துவ உதவிகளை ஏற்றி இந்தியா வரவிருந்த பயணிகள் விமானத்தை அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மூலம் தாக்கியுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஷ்ஹத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ‘மஹான் ஏர்’ நிறுவனத்தின் விமானம் மனிதாபிமான உதவியாக மருத்துவ உபகரணங்களை ஏற்றி இந்தியா வரவிருந்தது. இந்த நிலையில், விமானம் தயாராக நின்றபோது அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு கூறுகிறது. இந்தத் தாக்குதலால் விமானம் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஈரான் விமானப் போக்குவரத்துத் துறை இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. “மனிதாபிமான உதவிக்காக பயன்படுத்தப்படும் பயணிகள் விமானத்தைத் தாக்கியது சர்வதேச சட்டங்களை மீறிய போர்க்குற்றம்” என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. சிகாகோ உடன்படிக்கை (1944), மாண்ட்ரியல் உடன்படிக்கை (1971) மற்றும் ஜெனிவா உடன்படிக்கை பிரிவு 52 ஆகியவற்றை மீறிய செயல் என்றும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: எங்கள் மன உறுதியை ரொம்ப சோதிக்காதீங்க!! அமெரிக்காவுக்கு ஈரான் சபாநாயகர் வார்னிங்!
ஈரான் தரப்பில், “இந்த விமானம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனிதாபிமான உதவிப் பொருட்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் நோக்கில் இயக்கப்பட்டது. இதுபோன்ற தாக்குதல் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானது” என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தவும், குற்றவாளிகளை தண்டிக்கவும், சிவில் விமானப் போக்குவரத்தைப் பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் சர்வதேச அமைப்புகளை ஈரான் வலியுறுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 18 அன்று ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்தியாவுக்கு முதல் முறையாக மருத்துவ உதவிகள் அனுப்பப்பட்டிருந்தன. அந்த உதவிக்கு தில்லி ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்திருந்தது. நாளை (ஏப்ரல் 1) மீண்டும் மருத்துவ உபகரணங்களை ஏற்றி இந்தியா அனுப்ப திட்டமிடப்பட்டிருந்த விமானமே இந்தத் தாக்குதலுக்கு இலக்கானது.
‘மஹான் ஏர்’ எனும் தனியார் விமான நிறுவனத்துக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளது. இந்த நிறுவனம் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், ஆயுதங்களை கொண்டு செல்வதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஈரான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க தரப்பில் இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. இந்தச் சம்பவம் ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. மனிதாபிமான உதவிகளுக்கான விமானத்தைத் தாக்கிய செயல் உலக நாடுகளிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? அப்படி ஒரு திட்டமே இல்லை! ஈரான் மீண்டும் நெத்தியடி!