மோசடிக்கு துணையா? அண்ணா பல்கலை விவகாரத்தில் நடவடிக்கை எடுங்க... வானதி சீனிவாசன் வலியுறுத்தல்...!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 480-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தி பேராசிரியர்கள் பலர், முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றிய தகவல் வெளியாகி சர்ச்சையானது. இந்த முறைகேட்டில் 800 பேர் வரை ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்
இந்த மோசடிக்கு காரணமான அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர்கள் இரண்டு பேர், மூன்று பேராசிரியர்கள் உட்பட 10 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்துள்ளதை குறிப்பிட்டார்.
பொறியியல் படிப்பு என்பது ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்க அண்ணா பல்கலைக்கழகமும், தமிழ்நாடு அரசும் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, மோசடிகளுக்கு துணை நின்று மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட காரணமாக இருக்கக் கூடாது என்று திட்டவட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய புள்ளிகளுக்கு செக்... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ...!
எனவே, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தினார். அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், மற்றும் அதற்கு காரணமானவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இனி இது போன்ற மோசடிகள் நடக்காதவாறு அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: டைம் தான் வேஸ்ட்... அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட்...!