சத்தமே இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வீட்டில் விஜய் செய்த சம்பவம்... வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...!
சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வரும் வீடியோவை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதும், நிவாரண உதவிகளை வழங்குவதும் தான் அரசியலில் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை காலங்காலமாக கடைபிடித்து வரும் வரலாறு. ஆனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூர் சம்பவத்தில் செய்துள்ள காரியம் நெட்டிசன்களை கடுமையாக விமர்சிக்க வைத்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை வீடியோ கால் மூலம் சந்தித்த விஜய், கரூர் வந்து அனைவரையும் நேரில் சந்திப்பதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து கரூர் செல்ல பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்றும், கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க திருமண மண்டபம் கிடைக்கவில்லை என்றும் தவெக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. எனவே பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING மாமல்லபுரத்தில் விஜய்... கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருடன் இன்று சந்திப்பு...!
நேற்று கரூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்றிரவு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களை இன்று காலை சந்தித்த விஜய், உயிர் இழந்தோர்களின் குடும்பத்தினரிடம் மருத்துவ செலவு, கல்வி செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வரும் வீடியோவை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட வீடியோ தான் அது. எந்த ஊடகங்களுக்கும் தெரியாமல், ரசிகர்களின் ஆராவாரம் இல்லாமல் கப்சிப் என கீர்த்தி சுரேஷ் வீட்டில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். இதனை அதிக அளவில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், ஒரு நடிகை வீட்டு விசேஷத்தில் சத்தமே இல்லாமல் கலந்து கொள்ள முடிந்த உங்களால், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை இரவோடு, இரவாக சென்று அமைதியான முறையில் சந்திக்க முடியாதா?, ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகும் வகையில் காவல்துறையிடம் அனுமதி கேட்பதாக நாடகமாடுவது ஏன்? என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உங்க விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் வீட்டு பொங்கல கொண்டாட சத்தமே இல்லாம பிரஸ், மீடியா னு யாருக்கும் தெரியாம போய் கரெக்டா நேரத்துக்கு பாணைல அரிசி போட தெரியும் ஆன பாதிக்க பட்ட மக்கள சந்திக்க பிரஸ் மீடியா கு எல்லாம் சீன் காமிச்சு அனுமதி கேட்டோம் னு உருட்ட வேண்டியது. கீர்த்தி சுரேஷ்… pic.twitter.com/sFGSYgLtQF
— TK_தமிழன் (@Hwttoknowstuffs) October 25, 2025
விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னை அழைத்து வந்து ஆறுதல் கூறிய சம்பவம் தவெகவினர் இடையேயே கடும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் வீட்டை விட்டு தாண்டி வர மாட்டேன் என்கிறார். வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்ற விமர்சனங்களுக்கு எல்லாம் முட்டுக்கொடுத்து வந்த தவெகவினருக்கு, கரூர் சம்பவம் மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது. இச்சம்பவத்தை அடுத்து மீண்டும் வீட்டுக்குள் முடங்கிய விஜய், எப்படியும் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திப்பார், மீண்டும் அரசியல் பயணத்தை ஃபுல் ஸ்பீடில் தொடங்குவார் என காத்திருந்த தவெகவினர் இன்று நட்சத்திர ஓட்டலில் நடந்த சம்பவத்தால் சோசியல் மீடியாக்களில் குவியும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 41 பேர் உயிரிழந்த சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை நாளை சந்திக்கிறார் விஜய்..!! கரூரிலிருந்து கிளம்பிய மக்கள்..!!