Fb, யூடியூபிற்கு எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு!
சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான மற்றும் தவறான தகவல்களைத் தடுப்பதற்கும், செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அமைச்சர் எல்.முருகன், டிஜிட்டல் ஊடகங்களில் அதிகரிக்கும் போலிச் செய்திகள் குறித்து அரசு விழிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் அதே வேளையில், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்) விதிகள், 2021-ஐ மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய விதிகளின் படி, டிஜிட்டல் தளங்களில் செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் 'நன்னடத்தை விதிகளை' கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மேலும், கேபிள் தொலைக்காட்சிச் சட்டம் மற்றும் பிரஸ் கவுன்சில் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள பத்திரிகை தர்மங்களை டிஜிட்டல் ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், யூடியூப் போன்ற இடைநிலைத் தளங்கள், தங்களது தளங்களில் முற்றிலும் பொய்யான அல்லது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டிய கடமை உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: வரலாற்று சாதனை! - 2027ல் இந்தியாவில் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!
பயனர்களின் குறைகளைத் தீர்க்க, இந்த விதிகளின் கீழ் மூன்று அடுக்கு குறைதீர்க்கும் முறை நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம், போலிச் செய்திகள் மற்றும் தவறான உள்ளடக்கம் குறித்துப் பொதுமக்கள் நேரடியாகப் புகார் அளிக்க முடியும்.
மத்திய அரசு தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை உடனடியாக அறிய, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கீழ் 2019-ம் ஆண்டே 'உண்மை சரிபார்ப்புக் குழு' அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஆதாரங்களிலிருந்து சரிபார்க்கப்பட்ட சரியான தகவல்களை இந்தக் குழு சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் பதிவேற்றி வருவதாக அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இணையதளங்கள் மற்றும் பதிவுகளை முடக்க, தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69ஏ-வின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தனது பதிலில் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: கூடங்குளம் அணு உலை ஆபத்து: பெட்ரோலை வைத்து கொள்ளை; மத்திய அரசை அட்டாக் செய்த சபாநாயகர் அப்பாவு!