×
 

வள்ளுவர் காவி உடை சர்ச்சை: பரபரப்பான சூழலில் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என் ரவி போட்ட தமிழ் பதிவு..!!

மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி காவி உடை படத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகையில் மே 30 அன்று ‘திருவள்ளுவர் திருநாள் கழகம்’ சார்பில் வைகாசி அனுஷம் திருவள்ளுவர் திருநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகப் பணியாற்றும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வின் போது திருவள்ளுவரின் படத்திற்கு காவி உடை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட புகைப்படம் பயன்படுத்தப்பட்டது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பொதுவாக வெண்மை உடையில் சித்தரிக்கப்படும் நிலையில், காவி நிற உடை பயன்படுத்தப்பட்டது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. சில அரசியல் கட்சிகள் இதை “திருவள்ளுவரை சமய நிறமூட்டும் முயற்சி” என்று கண்டித்தனர். இந்தச் சர்ச்சை அடங்கும் முன்பே மேற்கு வங்காள ஆளுநர் ஆர்.என். ரவி இதே காவி உடை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். 

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் மற்றும் தற்போது மேற்கு வங்கத்தின் ஆளுநருமான ரவி, திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளைப் புகழ்ந்து விரிவான பதிவொன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “திருவள்ளுவர் ஜெயந்தி மற்றும் வைகாசி அனுஷம் எனும் மங்களகரமான திருநாளில், பாரதியரின் சனாதன மரபை சார்ந்த மாபெரும் தமிழ் ஞானியும் புலவருமான திருவள்ளுவருக்கு, தேசம் தனது ஆழ்ந்த மரியாதையை உரித்தாக்குகிறது. திருவள்ளுவரின் 'திருக்குறள்', அறம் மற்றும் நீதியின் என்றும் அழியாத சங்கமமாகத் திகழ்ந்து, அறம் சார்ந்த வாழ்வு மற்றும் நெறிசார்ந்த ஆட்சிமுறைக்கும், தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக வாழ்வை வடிவமைக்கும் விழுமியங்களுக்கும் வழிகாட்டுகிறது. அவரது குறள்கள் இன்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டி வருவதுடன், உலகளாவிய தாக்கத்துடன் பாரதத்தின் ஆன்மிக பரிணாமத்தை செதுக்கி வருகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

திருவள்ளுவர் தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் தத்துவ ஞானியாகக் கருதப்படுகிறார். அவரது திருக்குறள் 1,330 குறட்பாக்களைக் கொண்டது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளில் வாழ்வியல் அறங்களை விளக்கும் இந்நூல் உலகப் புகழ் பெற்றது. உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நூல் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகிறது.

ஆர்.என். ரவியின் இந்தப் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவரைப் பொதுவுடைமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசியல் தரப்புகள், ஆளுநர்களின் இத்தகைய நடவடிக்கைகள் மதச்சார்பின்மைக்கு எதிரானவை என்று குற்றம் சாட்டுகின்றன. மறுபுறம், திருவள்ளுவரின் கருத்துகள் இந்திய ஆன்மீக மரபோடு இணைந்தவை என்று சிலர் பாதுகாக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியின் எல்லைகள் மற்றும் கலாச்சாரப் பிரச்னைகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. திருக்குறளின் உலகளாவிய முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் வகையில் இந்த விழா நடைபெற்றாலும், உடை தொடர்பான படம் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. 

இதையும் படிங்க: தவெக நிர்வாகிகளே தயாரா?... முதலமைச்சர் விஜய் தரப்போகும் பிறந்தநாள் பரிசு...மாவட்டந்தோறும் பறந்த அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share