நேரு ஆவணங்கள்ல அப்பிடி என்ன ரகசியம் இருக்கு? சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி?
''முன்னாள் பிரதமர் நேரு குறித்த 51 ஆவணங்களில் என்ன ரகசியமாக வைக்கப்படுகிறது,'' என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் தொடர்புடைய 51 முக்கிய ஆவணங்கள் குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஆவணங்கள் பிரதமர்கள் நினைவு அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதாக காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், மத்திய அரசு அவை 2008-ஆம் ஆண்டே நேரு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக விளக்கமளித்தது.
கடந்த 15-ஆம் தேதி பார்லிமென்ட்டில் பாஜக எம்.பி. சம்பித் பாத்ரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சகம், நேரு தொடர்புடைய எந்த ஆவணமும் காணாமல் போகவில்லை என்று தெரிவித்தது. இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், உண்மை வெளியானதாகக் கூறி பாஜகவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்ட அறிக்கையில், அந்த 51 ஆவணங்கள் 2008-ஆம் ஆண்டு நேரு குடும்பத்தினரால் திரும்பப் பெறப்பட்டவை என்றும், அவை காணாமல் போகவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அவை தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குடியுரிமை கிடைக்கிறது முன்னாடி வாக்குரிமை எப்படி? டெல்லி கோர்ட் கிடுக்குப்பிடி கேள்வி?! சோனியா காந்திக்கு சிக்கல்!
அமைச்சர் ஷெகாவத் மேலும் கூறுகையில், சமீபத்தில் 2025 ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அருங்காட்சியகம் சார்பில் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் ஆவணங்கள் திருப்பித் தரப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இந்த ஆவணங்களில் என்ன ரகசியம் மறைக்கப்படுகிறது என்று சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆவணங்கள் தனிநபர் குடும்பத்துக்கு சொந்தமானவை அல்ல என்றும், நாட்டின் முதல் பிரதமருடன் தொடர்புடைய தேசிய வரலாற்று ஆவணங்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இவற்றை அணுக உரிமை உண்டு என்றும், அவை பூட்டிய அறையில் வைக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.
வரலாற்றைத் தேர்ந்தெடுத்து திருத்த முடியாது என்றும், வெளிப்படைத்தன்மை ஜனநாயகத்தின் அடிப்படை என்றும் அமைச்சர் ஷெகாவத் தெரிவித்தார். சோனியா காந்தியும் அவரது குடும்பமும் இந்த ஆவணங்களை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேருவின் ஆவணங்கள் தொடர்பான இந்த விவகாரம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க மாட்டேன்!! ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் மூத்த தலைவர் அடம்!