சிறை தண்டனை நிறுத்தம்: "விவசாயிகளுக்காக உயிரையும் விடுவேன்" விடுதலையான பி.ஆர்.பாண்டியன் பேட்டி!
ஓஎன்ஜிசி வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பி.ஆர். பாண்டியன் இன்று திருச்சி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
ஓஎன்ஜிசி (ONGC) சொத்துக்களைச் சேதப்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று திருச்சி மத்தியச் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். சிறை வாசலில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் அவருக்கு மலர் தூவி, ‘வீர முழக்கமிட்டு’ உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2015-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் கரியமங்கலத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் திட்டத்திற்கு எதிராகப் போராடியபோது, அரசுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகப் பி.ஆர்.பாண்டியன் மற்றும் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம் இருவருக்கும் தலா 13 ஆண்டுகள் ‘கறார்’ சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், விவசாய நலனுக்காகப் போராடியதைக் கருத்தில் கொண்டு நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கினார். சிறையிலிருந்து வெளியே வந்த பி.ஆர்.பாண்டியன், நேராகத் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் டார்கெட்?! காங்கிரசில் இணைந்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேத்தி சமனா!
செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், "ஓஎன்ஜிசி நிர்வாகம் காவல்துறையைப் பயன்படுத்தி எங்கள் மீது பொய் வழக்குகளைச் சுமத்தியது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விவசாயிகளின் குரலை ஒடுக்க நினைத்தவர்களின் சதி இது. 100 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகப் பச்சைப் பொய் சொன்னார்கள். இந்தத் தண்டனை எனக்கு விதிக்கப்பட்டது அல்ல, ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளுக்கும் விதிக்கப்பட்டது. விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டச் சிறை மட்டுமல்ல, உயிரையும் விடத் தயாராக இருக்கிறோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். அவருடன் இருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், "விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்துப் போராட்ட வழக்குகளையும் முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: தமிழக காங்கிரஸில் மாவட்ட தலைவர் தேர்வு சர்ச்சை! மேலிட பார்வையாளர்களுக்கு ‘பண மழை’! பட்டியல் வெளியீடு தாமதம்?