"ஓய்வெடுங்கள் பாரதிராஜா"..! முதல் மரியாதை இமயத்திற்கு இறுதி மரியாதை..! தவிக்கும் திரையுலகம்..!!
தேனியில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நலடக்கம் செய்யப்பட்டது.
இயக்குனர் இமயம் பாரதிராஜா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு மிகப்பெரிய பேரிழப்பாக இருக்கிறது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.
அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர்.
கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து வந்தவர், தனது மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கிப் போனார். கடந்த ஒரு சில மாதங்களாக பாரதிராஜா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்ட பாரதிராஜாவின் உடலுக்கு நேற்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு தேனியில் வத்தலகுண்டு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்
இதையும் படிங்க: "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!
தமிழ் சினிமாவுக்கு முதல் மரியாதை கொடுத்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. திரை பிரபலங்களும், அரசியல் துறையினரும், பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச்சடங்கு நிறைவடைந்தது. தமிழக அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னி அரசு, காவல்துறை அதிகாரிகள் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு பாரதிராஜாவின் உடல், 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. புது வேதத்தின் படைப்பாளி மண்வாசனையில் கலந்திருக்கிறார். கண்ணியம் மிக்க காதலுக்கு முதல் மரியாதை கொடுத்த நாயகன்… பாரதிராஜா என்ற மாபெரும் இயக்குனர் மறைந்தாலும் அவரது படைப்புகள் ஒவ்வொரு நொடியும் பேசப்பட்டு கொண்டே இருக்கும்.
இதையும் படிங்க: மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!