×
 

பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!

சமூக வலைதளங்களில் அந்த பதிவுகள் பரவ அனுமதித்ததாகக் கூறி, மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸையும் இணை குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட படங்கள் மூலம் இழிவுபடுத்தும் வகையிலான உள்ளடக்கங்கள் சமூக வலைதளங்களில் பரவியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் மீது ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநில பாஜக நிர்வாகி சாய்கிரண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது புகாரில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட சுமார் 20 பதிவுகள் மற்றும் ரீல்ஸ் இணைப்புகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. அந்த பதிவுகளில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்ட காட்சிகளில் இடம்பெற்றிருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்திய நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மேற்காசியாவில் போர் பதற்றம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் பற்றாக்குறை? மோடி அவசர ஆலோசனை!

இந்த வழக்கில், சமூக வலைதளங்களில் அந்த பதிவுகள் பரவ அனுமதித்ததாகக் கூறி, மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸையும் இணை குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பதிவுகள் குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுவது குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி தொடர்பான ஒரு வீடியோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீக்கப்பட்டதற்காக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன், மெட்டா நிறுவன அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். தற்போது இந்த புதிய எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏஐ மூலம் பரப்பப்படும் போலி உள்ளடக்கங்கள் தொடர்பான விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மேற்காசியா பதற்றம் எதிரொலி! பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம்!! முக்கிய ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share