சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!
முதல்வர் தனது தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா என்று புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டி நயினார் விமர்சனம் செய்துள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய் தனது ‘தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் ரங்கம்மாள் சத்திரம் அருகே அரசுப் பேருந்தில் கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி ஓட்டுநர் திடீரெனப் பேருந்துக் கதவைத் திறந்ததால், அதில் பயணம் செய்த எட்டுக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள் படுகாயமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக நீதி பேசும் இந்த மண்ணில் கல்வி பயில ஆர்வத்துடன் வரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு நேர்ந்துள்ள இந்த அநீதி, ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கே நேர்ந்த அவமானம் என அவர் வருத்தம் தெரிவித்தார்.தமிழகத்தின் பெண்களுக்கு அண்ணன் என்றும் மகன் என்றும் மேடைதோறும் பாச வசனம் பேசி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அவர்களது ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களும் அவமரியாதைகளும் மலிந்துவிட்டதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
பள்ளி நேரங்களில் போதுமான பேருந்துகளை இயக்காமல் கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி மாணவிகளைத் தூக்கி எறிவதுதான் மாற்றத்திற்கான ஆட்சியா என அவர் கேள்வி எழுப்பினார். முதல்வரின் மேடை வசனங்களுக்கும் நிஜமான நிர்வாகத்திற்கும் துளிகூடச் சம்பந்தம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மார்க்... நெல்லையில் நின்று விஜயை விளாசித் தள்ளிய நயினார் நாகேந்திரன்...!
இச்சம்பவத்திற்குக் காரணமான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிய அவர், காயமடைந்த மாணவிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்குவதோடு பள்ளி நேரங்களில் தடையின்றி கூடுதல் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறைக்கு முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். இல்லையெனில் தமிழக மாணவ மாணவிகளின் பாதுகாப்பிற்காகப் பாரதிய ஜனதா கட்சி வீதியில் இறங்கிப் போராடும் எனவும் நயினார் நாகேந்திரன் எச்சரித்தார்.
இதையும் படிங்க: மத அரசியல்..! சீரழியும் சட்டமன்ற மாண்பு..! வெளுத்துவிட்ட நயினார்.!!