அப்போதே தடுத்தேன்! எடப்பாடி கேக்கல!! மீண்டும் போர்க்கொடி தூக்கிய எஸ்.பி வேலுமணி! அதிமுகவில் பரபரப்பு!
கட்சி கொடி, பேனர் இல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் வேலுமணி ஆலோசனை நடத்தினார். தனது ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என, பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கடிதம் எழுத உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இந்த கூட்டத்தில் அதிமுக கட்சிக் கொடி, பேனர் அல்லது பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் படம் இடம்பெறாதது பல்வேறு அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தொண்டாமுத்தூர் அருகே நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. கூட்டம் முடிந்த பிறகு வேலுமணி தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து உணவருந்தினார்.
கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, தன்னை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். அதிமுக கொடி மற்றும் பேனர் இடம்பெறாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “எங்களுடைய தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மா ஜெயலலிதாவின் படங்கள் மேடையில் உள்ளன” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!
கூட்டத்தில் பேசியதாக கூறப்படும் கருத்துகள் குறித்து நிர்வாகிகள் பகிர்ந்த தகவலின்படி, கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்ததற்கான காரணங்களை வேலுமணி விளக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த விவகாரத்திற்குப் பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்ட தனது ஆதரவாளர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆதரவாளர்களுக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படாவிட்டால், தனக்கும் எந்த பதவியும் தேவையில்லை என்றும், தொகுதி நிர்வாகிகளும் மக்களும் எடுக்கும் முடிவே தனது இறுதி அரசியல் முடிவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்ததாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.
வேலுமணியின் இந்த ஆலோசனைக் கூட்டமும், அவர் வெளியிட்டதாக கூறப்படும் கருத்துகளும் அதிமுகவில் மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு கட்சித் தலைமை தரப்பில் என்ன பதில் வெளியாகிறது என்பதையும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமையும் என்பதையும் அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: அதிமுகவில் அதிரடி மாற்றம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி!