ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்! தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
காவிரி உரிமைக்காக போராடிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த த வெ க அரசின் தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் உரிமை தொடர்பாகத் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும் எனத் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டத் தவறியதாகவும், மேகதாது அணைக் கட்டுமானத்தைத் தடுக்கத் தவறியதாகவும் கூறித் தமிழகக் த.வெ.க. அரசைக் கண்டித்துத் தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்கு வந்த காவல் படையினர் அவரை அராஜகமாகக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். நாளை சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருப்பதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுதலை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, த.வெ.க. அரசின் பாசிசப் போக்கிற்கு விழுந்த அடி. காவிரி விவகாரத்தில் அரசின் கையாலாகாத்தனம் வெளிச்சத்திற்கு வந்ததைத் திசைதிருப்பவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தது முதல் விமர்சிப்பவர்களைக் கைது செய்வதையே முதலமைச்சர் விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். நீட் எதிர்ப்புப் போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு மெரினா கடற்கரை பூட்டப்பட்டது பாசிசத்தின் உச்சம்.
உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை; அவர் பேசாத ஒன்றைச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் சில அரசியல் தலைவர்கள் கண்டிப்பது வருந்தத்தக்கது. தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுப் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக தொண்டர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், ரீல்ஸ் கிரியேட்டராக வலம் வருவதைத் தவிர்த்து முதலமைச்சர் விஜய் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!