“விசாரணை முடிந்தது, வதந்திகளை நம்பாதீர்!” விஜய் மீண்டும் ஆஜராகத் தேவையில்லை த.வெ.க. நிர்மல் குமார் விளக்கம்!
கரூர் தேர்தல் பிரச்சார விபத்து தொடர்பாக, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது.
கடந்த 2027 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற த.வெ.க. தேர்தல் பரப்புரையில் நேரிட்ட கோரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் ஆறாத வடுவாக மாறியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., ஏற்கனவே கடந்த ஜனவரி 12-ஆம் தேதி விஜய்யிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று (ஜனவரி 19) காலை 10.30 மணியளவில் டெல்லி லோதி எஸ்டேட் சாலையில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் விஜய் இரண்டாவது முறையாக ஆஜரானார்.
சுமார் 5.30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில், விபத்து நடந்த அன்று நிலவிய சூழல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய், சி.பி.ஐ. அலுவலக வாசலில் காத்திருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்களைப் பார்த்துக் காரிலிருந்து இறங்கி கையசைத்துவிட்டுப் புறப்பட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், "எங்கள் தலைவர் சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை அளித்துள்ளார். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் தரப்பில் எந்த அறிவுறுத்தலோ, சம்மனோ வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சி.பி.ஐ. வளையத்தில் விஜய்! கரூர் துயரம் குறித்து டெல்லியில் 2-வது நாள் விசாரணை!
மேலும், விஜய் கைது செய்யப்படலாம் அல்லது குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் சேர்க்கப்படலாம் என ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அவர் வன்மையாக மறுத்தார். "இவை அனைத்தும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள். சில அரசியல் சக்திகள் எங்கள் வளர்ச்சியைப் பிடிக்காமல் இது போன்ற தகவல்களைப் பரப்புகின்றனர். சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மை விரைவில் வெளிவரும்" என நிர்மல் குமார் ஆவேசமாகத் தெரிவித்தார். விஜய்யின் இந்த டெல்லி பயணம் மற்றும் சி.பி.ஐ. விசாரணை முடிவுக்கு வந்துள்ளது அவரது தொண்டர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்யின் மாஸ் மூவ்! பிரசாரக் குழுவில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உட்பட 10 பேர் நியமனம்!