×
 

ஆட்டம் காட்டப்போகும் விஜய்..!! ரெடியான தேர்தல் அறிக்கை..!! ரிலீஸ் எப்போ தெரியுமா..??

தவெக தேர்தல் அறிக்கை பல முக்கிய அம்சங்களுடன் வரும் 27-ந்தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இதற்கிடையே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் தயாரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது. கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தாலும், இம்முறை சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விஜய் அணி முழு வீச்சில் இறங்கியுள்ளது.

தற்போது தமிழக அரசியல் நான்கு முனைகளில் பிரிந்து நிற்கிறது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி மிகுந்த வலிமையுடன் தயாராகி வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, மக்கள் நீதி மையம், கொமதேக, தவாக உள்ளிட்ட பல கட்சிகள் திமுகவுடன் இணைந்துள்ளன. இதனால் திமுக கூட்டணி பெரும் பலத்துடன் களமிறங்க உள்ளது.

மறுபுறம், அதிமுக தலைமையில் பாஜக, பாமக, புதிய நீதி கட்சி, தமமுக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை என்றாலும், ஏதோ ஒரு அணியுடன் இணைய வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: புதுச்சேரி தவெக புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு... 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் விஜய்!

இந்நிலையில், விஜய் தலைமையிலான தவெக நான்காவது அணியாக எண்ட்ரி கொடுத்துள்ளது. தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய், அரசியலில் குதித்து கட்சியை வளர்த்து வருகிறார். முந்தைய தேர்தல்களை புறக்கணித்து, 2026-ஐ மட்டுமே இலக்காகக் கொண்டது விமர்சனத்துக்கு உள்ளானது. இருப்பினும், "வீட்டுக்கு ஒரு ஓட்டு" என்ற முழக்கத்துடன் இரண்டரை கோடி வாக்குகளை இலக்காகக் கொண்டு தவெக களமிறங்கியுள்ளது. 

ஆனால், அக்கட்சி சார்பில் போதிய நடவடிக்கைகள் இல்லை என சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜய் தேர்தல் அறிக்கையை முக்கிய ஆயுதமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கை பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. 

குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஏற்கனவே அறிவித்து வருகிறார். முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் தவெக, தேர்தல் அறிக்கையின் மீதே பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளது. இதற்காக 12 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொழிலதிபர்கள், பெண்கள், இளைஞர்கள், பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துகளை சேகரித்துள்ளது. 

மேலும், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் சிறப்பு இணையதளம் (tvkmanifesto2026.com) தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஆலோசனைகளை அனுப்பியுள்ளனர். தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 27-ஆம் தேதி முழுமையான தேர்தல் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமில்லாததால், பனையூரில் நிர்வாகிகள் கூட்டத்தில் அல்லது வேலூர், பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. திமுக, அதிமுக போல வெறும் இலவச திட்டங்களை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், தொலைநோக்கு திட்டங்கள், மக்கள் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த அறிக்கை இருக்கும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். இலவசங்கள் இல்லாத மாற்று வழிகள், நிரந்தர தீர்வுகளை வழங்கும் திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தவெக, தனது முதல் தேர்தலில் வலுவான அடித்தளத்தை அமைக்க முயல்வதாகத் தெரிகிறது. தேர்தல் அறிக்கை வெளியீட்டுடன் கட்சியின் பிரசாரம் மேலும் தீவிரமடையும் என்பது தெளிவு.

இதையும் படிங்க: விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share