#BREAKING: விஜய் ரோடு ஷோ: தவெக நிர்வாகிகளுடன் முதல்வரை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்!
தவெக தலைவர் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு, புதுச்சேரி முதலமைச்சரை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய்யின் 'ரோடு ஷோ' திட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை இன்னும் அனுமதி வழங்காத நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்துள்ளனர்.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இன்று (டிசம்பர் 2, 2025) புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். வரும் டிசம்பர் 5ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்குமாறு அவர்கள் முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரோடு ஷோவை அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
.
த.வெ.க.வினர் புதுச்சேரி காவல்துறையிடம் இதுவரை 4 முறை மனு அளித்தும், விஜய்யின் ரோடு ஷோவுக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. முன்னதாக, புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஆர். செல்வம், கரூரில் ஏற்பட்ட சம்பவத்தைக் காரணம் காட்டியும், புதுச்சேரியின் குறுகிய சாலைகளைக் கருத்தில் கொண்டும், ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பது நல்லது என்றும், அதற்குப் பதிலாகப் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கமாட்டோம் - சபாநாயகர் செல்வம் திட்டவட்டம்!
தற்போது முதலமைச்சரிடம் நேரடியாக அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் காவல்துறை விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவின் விடாமுயற்சி: புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த அதிகாரிகள் மறுத்த போதும் தொடர் முயற்சி!