உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!
ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்ய படை சார்பில் போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்ய படைக்காக போரிட்ட இந்தியர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 26 இந்தியர்கள் ரஷ்யாவில் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் கூறி அவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அரசு தரப்பில் கூறப்பட்டதாவது: மனுவில் குறிப்பிடப்பட்ட 26 இந்தியர்களில் 10 பேர் போரில் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய நிறுவனங்களுடன் சுயமாக ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் ஈடுபட்டவர்கள். சில ஏஜென்ட்கள் இவர்களை தவறாக வழிநடத்திய சம்பவங்களும் உள்ளன. மீதமுள்ளவர்களில் ஒருவர் குற்றவியல் வழக்கில் சிறையில் உள்ளார், மற்றொருவர் இன்னும் போரில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!
மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் இதை மறுத்து, “வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏஜென்ட்கள் இவர்களை ஏமாற்றியுள்ளனர். ரஷ்யா சென்றதும் பாஸ்போர்ட்டுகள் பறிக்கப்பட்டு, கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், “போர் களத்தில் இருந்து உடல்களை மீட்பது மிகவும் கடினமான பணி. பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்கவும், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கொண்டு வரவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இந்திய இளைஞர்கள் ரஷ்ய - உக்ரைன் போரில் சிக்கும் சம்பவங்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!