ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!
அ.தி.மு.க., நிர்வாகி இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக வழக்கு பதிவு செய்ய, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரான தி.மு.க. மூத்த தலைவர் கே.என்.நேரு துறையில் பெரும் ஊழல் வெடித்துள்ளது. அமலாக்கத் துறை (ED) அளித்த 258 பக்க ஆதார அறிக்கையில், டெண்டர் முறைகேடுகள் மூலம் ரூ.1,020 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.
அமைச்சரின் தம்பிகள், உதவியாளர்கள் இதில் சூத்திரதாரிகளாக செயல்பட்டதாக ED கூறுகிறது. ஒப்பந்ததாரர்களிடம் 7.5% முதல் 10% வரை 'கட்சி நிதி' பெயரில் லஞ்சம் வசூலித்து, டெண்டர்களை முன்கூட்டியே நிர்ணயித்து வழங்கியதாக குற்றச்சாட்டு. இதில் சென்னை சிபிசிஐடி, கிழக்கு மண்டல போலீஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் 2 பேர், ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேர் உட்பட புரோக்கர்கள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024-26 காலகட்டத்தில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களில் நியமனத்தில் ரூ.630 கோடி முதல் ரூ.888 கோடி வரை 'கேஷ் ஃபார் ஜாப்ஸ்' ஊழல் நடந்ததாக ED கூறியது. இதற்கு தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்கள் (வாட்ஸ்ஆப் சாட்கள், புகைப்படங்கள்) கிடைத்ததாக தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!
கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி 232 பக்க டாசியர், டிசம்பர் 3-ஆம் தேதி 258 பக்க டாசியர் ஆகியவற்றை தமிழக டிஜிபி வெங்கடராமனுக்கு ED அனுப்பியது. லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியது. ஆனால் DVAC ஆரம்ப விசாரணை என்று காலம் தாழ்த்தியது.
அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் (பிப்.20, 2026), ED ஆதாரங்கள் போதுமானவை எனக் கூறி, உடனடியாக FIR பதிவு செய்ய DVAC-க்கு உத்தரவிட்டது. ஆனால் இன்னும் வழக்கு பதிவாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீஸ் வட்டாரங்கள்: "முதற்கட்ட விசாரணைக்குப் பிறகே FIR பதிவு செய்யும் நடைமுறை உள்ளது" என்கின்றனர். ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி தாமதம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமைச்சர் நேரு: "அரசியல் உந்துதல் கொண்ட பொய்கள்" என மறுத்துள்ளார். தி.மு.க. அரசு விசாரணை நடத்தி வருவதாகக் கூறுகிறது. எதிர்க்கட்சிகள் (அதிமுக, பாஜக, தவெக) கடும் விமர்சனம் செய்து, உடனடி நடவடிக்கை கோருகின்றன.
தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ஊழல் புகார் தமிழக அரசியலை சூடுபிடிக்கச் செய்துள்ளது. மக்கள் நீதி கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: பொய் பேசுறத நிறுத்துங்க! உங்க அண்ணன்கிட்ட கேளுங்க! கனிமொழிக்கு அண்ணாமலை அதிரடி ரிப்ளை!!