×
 

அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க தாமதிக்கும் முதல்வர் விஜய்! 3,000 கோப்புகள் தேக்கம்!

புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் கையெழுத்துக்காக, 3,000 கோப்புகள் கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்று ஒரு வாரம் ஆகியும், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் அரசு நிர்வாகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கையெழுத்துக்காக மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் துறைகளில் குவிந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10ம் தேதி பதவியேற்ற ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய ஒன்பது அமைச்சர்களுக்கும் இதுவரை துறைகள் ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸ் மற்றும் விசிக கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தருவது, அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்களை அமைச்சரவையில் இணைப்பது உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்ட பிறகு பல்வேறு துறைகளில் முக்கிய முடிவுகள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளுக்கான 3,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் தயாராக உள்ளன. அமைச்சர்கள் கையெழுத்திட்டால்தான் இந்தக் கோப்புகள் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். ஆனால் துறை ஒதுக்கீடு தாமதமாகும் நிலையில் இந்தக் கோப்புகள் அனைத்தும் கிடப்பில் உள்ளன.

இதையும் படிங்க: முதல்வர் ஆவதற்கு முன்பே விஜய் எதிர்த்த பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்!! அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!

மேலும், அடுத்த 10 நாட்களுக்குள் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல், மானியக் கோரிக்கைகள், விவாதங்கள் உள்ளிட்ட முக்கியப் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் துறை ஒதுக்கீடு தாமதமாகும் நிலையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தவும் இயலாத சூழல் உருவாகியுள்ளது.

அரசு இயந்திரம் தொய்வின்றி செயல்பட வேண்டுமெனில், விரைவில் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் முதல்வர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற முதல் கட்டத்திலேயே இத்தகைய நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்குரியதாக உள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் துறை ஒதுக்கீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகள் தமிழக அரசின் செயல்பாட்டின் வேகத்தையும், முதல்வர் விஜய்யின் நிர்வாக திறனையும் நிரூபிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share