தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் கன்ஃபார்ம்?! தென்கொரியாவில் அதிரடி காட்டும் அமைச்சர் கீர்த்தனா!
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதை உறுதி செய்யும் விதமாக, தென்கொரியாவின் ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை அமைச்சர் கீர்த்தனா நேர்மறையாக முன்னெடுத்துள்ளார்.
தூத்துக்குடி: தமிழகத்தில் புதிய தவெக ஆட்சி அமைந்த பிறகு, தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற 29 வயது இளம்பெண் கீர்த்தனா, தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் உலகின் மிகப் பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான தென்கொரியாவின் எச்டி ஹூண்டாய் நிறுவனத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, ரூ.40,000 கோடி மதிப்பிலான கப்பல் கட்டும் தளத் திட்டத்தை உறுதி செய்துள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியின் போது தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எச்டி ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த முதலீடு தொடருமா என சந்தேகம் எழுந்த நிலையில், அமைச்சர் கீர்த்தனா தானே தென்கொரியாவுக்கு நேரில் சென்று நிறுவன அதிகாரிகளைச் சந்தித்தார். “தமிழக அரசு மாறினாலும், முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும், அனுமதிகளும் உடனடியாக வழங்கப்படும்” என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!
இந்த சந்திப்பின் மூலம், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பிரம்மாண்ட திட்டம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் தூத்துக்குடியில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
இந்த முக்கிய சந்திப்பின் புகைப்படங்களை அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மிக இளம் வயதில் அமைச்சராகப் பொறுப்பேற்ற கீர்த்தனா, செயல்பாட்டு ரீதியில் தனது திறமையை நிரூபித்து வருவதாக பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
தமிழக அரசு தற்போது பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை வேகப்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கினால், தமிழகம் கப்பல் தொழிலில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக உருவெடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இளம் அமைச்சரின் இந்த உறுதியான அணுகுமுறை, தமிழகத்தில் தொழில் முதலீட்டுச் சூழலை ஊக்கப்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். திட்டம் விரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் என அமைச்சர் கீர்த்தனா நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!