முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்?! விரைவில் விசாரணைக்கு வரும் வழக்கு! ஹைகோர்ட்டில் பரபரப்பு!
தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை: தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராகத் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யலாம். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக மொத்தம் 55 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன.
முதல்வர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் மூன்று வழக்குகளும், திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு வழக்கும் என நான்கு தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் ஆகியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் நிதியில் பாதி சுருட்டிய முக்கிய தலைகள்!! உண்மை கண்டறியும் குழுவிடம் போட்டுக்கொடுத்த காங்., நிர்வாகிகள்!
இதுதவிர, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், மரிய வில்சன் உள்ளிட்டோருக்கு எதிராகவும் தேர்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த லீமா ரோஸின் வெற்றியையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், இம்முறை தேர்தல் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2011 சட்டசபைத் தேர்தலில் 12 வழக்குகள், 2016-ல் 23 வழக்குகள், 2021-ல் 13 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. ஆனால் இந்த முறை 55 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அனைத்து தேர்தல் வழக்குகளுக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதிகளை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் என்பதால், தமிழக அரசியலில் அடுத்த சில மாதங்கள் முக்கியமான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இவ்வளவு பெரிய அளவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது அரசியல் கட்சிகளிடையே புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த வழக்குகளின் முடிவு பல தொகுதிகளின் அரசியல் சமன்பாட்டை பாதிக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: சொதப்பிய GenZ DMK! 2000 பேர் கொடுத்து 500 பேரே திரண்டனர்! திமுக மேலிடம் அதிர்ச்சி!