அரியணை ஏறுவாரா விஜய்? தவெக முன்னாள் இருக்கும் சவால்கள்?! தவிக்கும் தொண்டர்கள்!
தேர்தல் நெருங்கும் வேளையில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க பெரிய கட்சியோ சிறிய கட்சியோ தவெக-வுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ள பெரும் உற்சாகம், பிரம்மாண்டமான கூட்டங்கள், சமூக வலைதளங்களில் பரவும் ஆதரவு அலை ஆகியவை தவெக-வை ஒரு வலுவான அரசியல் சக்தியாகக் காட்டுகின்றன.
ஆனால், இந்த ஆரவாரங்களுக்கு அப்பால் கட்சியை ஒரு கழுகு பார்வையில் உற்று நோக்கினால், அடித்தளம் மிகவும் பலவீனமாகவும், வியூகங்கள் தெளிவற்றதாகவும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியை அதிர வைத்த விசில் சப்தம்!! விஜயின் ப்ளான் B! அமித்ஷாவையே அலறவிட்ட தளபதியின் சீக்ரெட்மூவ்!!
தவெக-வின் தற்போதைய நிலை குறித்து அரசியல் அலசல்களில் முன்வைக்கப்படும் மிக முக்கியமான கேள்விகள் பல உள்ளன. முதலில், கூட்டணி இல்லாதது மிகப் பெரிய பலவீனமாக உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க பெரிய கட்சியோ சிறிய கட்சியோ தவெக-வுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.
தமிழக அரசியலில் தனித்து நின்று வெற்றி பெறுவது திமுக, அதிமுக போன்ற திராவிட ஜாம்பவான்களுக்கே மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில், கூட்டணிகள் இல்லாதது விஜய்க்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, இரண்டாம் கட்டத் தலைவர்கள் பற்றாக்குறை. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததைத் தவிர, வேறு எந்தப் பெரிய அரசியல் ஆளுமையும் விஜய்யின் பின்னால் வரவில்லை. அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லாத ஒரு கட்சி தேர்தல் களத்தில் வெறும் ரசிகர் மன்றமாகவே காட்சியளிக்கும் அபாயம் உள்ளது. நாஞ்சில் சம்பத்தைப் போன்றவர்கள் மேடைப் பேச்சில் சிறப்பாக இருந்தாலும், அரசியல் ரீதியாக பெரிய பலன் தர மாட்டார்கள் என்ற விமர்சனம் நிலவுகிறது.
மூன்றாவதாக, கொள்கை தெளிவின்மை. விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன என்பதை இதுவரை தெளிவாக வரையறுக்கவில்லை. அம்பேத்கர் முதல் வேலு நாச்சியார் வரை பல தலைவர்களின் படங்களைப் பயன்படுத்துகிறார்.
ஆனால் எதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்? அவரது கட்சியின் சித்தாந்தம் என்ன? என்பதற்கு தெளிவான பதில் இல்லை. "பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்" என்பது அழகான குரல் மட்டுமே, ஆழமான கொள்கை அல்ல என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இது ஒரு கொள்கை சார்ந்த கட்சியாக இல்லாமல், எல்லோருக்கும் பிடித்தது போல் இருக்க வேண்டும் என்ற முயற்சியாகவே தெரிகிறது.
நான்காவதாக, நிதி ஆதாரம் குறித்த சந்தேகம். விஜய்யின் பிரம்மாண்ட பிரச்சாரங்களுக்குப் பின்னால் இருக்கும் பணபலம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. அரசியல் ஆலோசகர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே இவ்வளவு பெரிய செலவுகளைச் செய்ய முடியாது. விஜய் தனது சொந்தப் பணத்தை இதில் முதலீடு செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், இந்தப் பணத்தின் பின்னணி என்ன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
ஐந்தாவதாக, தரைமட்ட அரசியல் சவால். இளைஞர்கள், பெண்கள், தலித் மற்றும் கிறிஸ்துவ சமூகத்தின் ஒரு பகுதியினர் விஜய்யை மாற்று முகமாக பார்க்க உற்சாகமாக இருக்கலாம். ஆனால் பல தசாப்தங்களாக கிளைக் கழகங்கள் வைத்திருக்கும் திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து, தவெக வேட்பாளர்கள் களத்தில் எப்படிப் பணியாற்றுவார்கள்? வெறும் சமூக வலைதள உற்சாகம் வாக்குகளாக மாறுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ஆறாவதாக, 'ஹெலிகாப்டர்' அரசியல் மக்களிடம் எடுபடுமா? என்ற கேள்வி. வீட்டை விட்டு வெளியே வரத் தயங்கும் ஒரு தலைவர், மக்களை எப்படிச் சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டங்களுக்கு பிரைவேட் ஜெட்டில், ஹெலிகாப்டரில் வந்து செல்வது மட்டும் போதுமா? மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் களத்தில் நின்று போராடாமல், தேர்தலுக்கு மட்டும் மேடை ஏறுபவர்களைத் தமிழக மக்கள் ஏற்பார்களா? என்பது பெரும் விவாதமாக உள்ளது.
இதற்கு முன் பல தலைவர்களுக்கு இப்படி பெரிய கூட்டங்கள் வந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். ஆனால் அவர்கள் யாரும் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அது வெறும் ரசனைக்காக வந்த கூட்டம். விஜய்யின் கூட்டத்திற்கும் இது பொருந்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: கைமாறும் அதிமுக ஐ.டி விங்!! ஆக்ஷனில் இறங்கும் வியூகம்!! எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவால் அதிமுக கம்பேக்!