அபிஜித் தீப்கே யார்? அமெரிக்க படிப்பு, அரசியல் பயணம் குறித்து தீவிர விசாரணை! RTI மூலம் புதிய கேள்வி!
நீட் போராட்டத்தை நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கேவின் அமெரிக்க படிப்பு செலவு, போராட்ட நிதி உள்ளிட்ட விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவர் அமெரிக்காவில் உயர் கல்வி படித்ததற்கான நிதி ஆதாரம் குறித்து தகவல் கேட்டு சூரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் அபிஜித் தீப்கே தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து அபிஜித் தீப்கேவின் அரசியல் பின்னணி, போராட்டத்துக்கான நிதி ஆதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவரது போராட்டத்திற்கு நிதி உதவி வழங்கியவர்கள் யார், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட விதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: நீட் போராட்டத்தில் போலீஸ் சீருடையில் ஊடுருவ சதி? டெல்லி போராட்டத்தை குறிவைத்த பயங்கரவாதி? அதிர்ச்சி தகவல்!
அபிஜித் தீப்கே புனேயில் இதழியல் படித்த பின்னர், அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக செயல்பாடுகள் மற்றும் தேர்தல் பிரசார உத்திகளில் பணியாற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சூரத்தை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அமித் திவாரி, அபிஜித் தீப்கே அமெரிக்காவில் படிப்பதற்கான செலவுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து தகவல் கோரி விண்ணப்பித்துள்ளார்.
அமித் திவாரி கூறுகையில், அபிஜித் தீப்கேவின் தந்தை மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியதாகவும், அவரது வருமானத்தை வைத்து அமெரிக்க கல்விக்கான செலவை எப்படி சமாளித்தார் என்பது குறித்து தகவல் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திடம் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகார்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது விளக்கம் வெளியாகாத நிலையில், அபிஜித் தீப்கே மற்றும் அவரது அமைப்பு தொடர்பான விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: சென்னை நீட் போராட்டத்தில் முதல்வர் விஜய்க்கு எதிரான கோஷங்கள்?! தவெக - இ.கம்யூ. கூட்டணியில் சலசலப்பு?