×
 

நேற்று திமுக... இன்று அதிமுக... எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எகிறி அடிக்கிறதா தவெக அரசு?

தவெக அரசை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டதாகக் கூறப்படும் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி இந்திராணி சுடலைமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தவெக அரசை விமர்சித்த பதிவு செய்ததற்காக அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.

இதையும் படிங்க: "என் அரசியல் வாழ்க்கையின் பெருந்தவறு"... வைகோ ஓபன் டாக்..! திமுக மீது விமர்சனம்..!!

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, சில வழக்குகளில் அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் மறுத்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அந்த வகையில், முதலமைச்சர் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி, மே 25-ஆம் தேதி நெல்லை முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா கைது செய்யப்பட்டார்.

அதேபோல், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் மறுத்தது.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க மறுத்தது.

மேலும், முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி கோவையைச் சேர்ந்த விஷ்ணு பிரபு, மனோஜ் குமார் மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த தங்கமணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அதிமுகவைச் சேர்ந்த இந்திராணி சுடலைமுத்துவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கைக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  “மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது ஜனநாயகக் குரலை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குதிரைப் பேரம், பொய் வழக்குகள், கைது நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அஞ்சக்கூடிய இயக்கம் அதிமுக அல்ல” என்று அதிமுக ஐடி பிரிவு தனது எக்ஸ் (X) தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், "எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்" என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதள பதிவுகள் தொடர்பாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில், இந்திராணி சுடலைமுத்துவின் கைது அதற்கான சமீபத்திய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமைச்சர் செங்கோட்டையனை திடீரென சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ... அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share