அரசியல் களத்தில் அசூர வேகம் காட்டும் திமுக! கும்பகர்ண தூக்கத்தில் அதிமுக! மூத்த நிர்வாகிகள் புலம்பல்!
தேர்தல் பணிகள் எதையுமே செய்யாமல், அ.தி.மு.க. சார்பு அணிகள் சுணங்கி போய் உள்ளதாக, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் 18 சார்பு அணிகள் மிகுந்த சுணக்கமாகவும், செயலற்ற நிலையிலும் உள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். "தேர்தல் பணிகள் எதுவும் நடக்கவில்லை, அணிகள் முழுமையாக தூங்கி விட்டன" என்று அவர்கள் புலம்பியுள்ளனர்.
கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, சார்பு அணிகளை வலுப்படுத்துவதற்காக பலமுறை உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒவ்வொரு மாவட்டத்திலும் சார்பு அணிகள் சார்பில் போராட்டங்கள் நடத்த உத்தரவு பிறப்பித்தார். ஆனால், பெயரளவில் சில மாவட்டங்களில் மட்டுமே சிறிய அளவில் நிகழ்ச்சிகள் நடந்தன. பெரும்பாலான இடங்களில் எந்த அசைவும் இல்லை.
மாவட்ட அமைப்புகளைத் தாண்டி ஒன்றியம், நகர அளவில் கூட நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. இதனால் அணிகளின் அடித்தள வேலை மிகவும் பலவீனமாக உள்ளது. தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு புகார், நெல் கொள்முதல் பிரச்னை, மருத்துவ கட்டண உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளில் கூட சார்பு அணிகள் வெளியே வரவில்லை.
இதையும் படிங்க: ஓயாத அதிருப்தி!! விடாமல் அடிக்கும் மாணிக்கம் தாகூர்!! திமுக கூட்டணி வேணுமா? வேணாமா? காங் முக்கிய முடிவு!
மருத்துவ அணி மௌனமாக இருந்தது, விவசாய அணி சத்தமே போடவில்லை, தொழிலாளர் அணி, இளைஞர் அணி என எந்த அணியும் துறை சார்ந்த பிரச்னைகளில் குரல் கொடுக்கவில்லை.
ஜெயலலிதா இருந்த காலத்தில், சார்பு அணிகள் தேர்தல் களத்தில் மிக சுறுசுறுப்பாக செயல்பட்டன. தொகுதி தொகுதியாக மக்கள் பிரச்னைகளை எடுத்துச் சென்று, கட்சியை வலுப்படுத்தின. ஆனால் இப்போது தேர்தல் நெருங்கிய நிலையிலும் அணிகள் முழு தூக்கத்தில் இருப்பதாக நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
"பழனிசாமி பலமுறை உத்தரவிட்டும் எந்த பயனும் இல்லை. அணிகளை செயல்பட வைக்க முடியவில்லை" என்று அவர்கள் குறைபட்டுக் கொண்டுள்ளனர். இந்த சுணக்கம் தேர்தல் நேரத்தில் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்ற அச்சம் கட்சியினரிடையே எழுந்துள்ளது.
அதிமுகவின் அடித்தள பலம் சார்பு அணிகள்தான். ஆனால் அவை செயலற்ற நிலையில் இருப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு சவாலாக உருவெடுத்துள்ளது. மூத்த தலைவர்கள் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், சார்பு அணிகளை உடனே தூண்டி விட வேண்டும் என்று கட்சி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
இதையும் படிங்க: தமிழகத்தின் இருண்ட காலம்! சில நாட்களில் முடிந்துவிடும்! திமுக ஆட்சிக்கு தேதி குறித்த அண்ணாமலை!