தேய்பிறை நிலவாய் தேயும் அதிமுக! தவெக தாவும் நிர்வாகிகள்! விஜய் கட்சியில் ஐக்கியமாகும் மாவட்ட செயலாளர்கள்!
சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், தமிழகத்தில் அ.தி.மு.க மேலும் மேலும் தேய்ந்து வருகின்றது.
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அ.தி.மு.க. தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. கட்சியின் மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்தனர். இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. ஏப்ரல் சட்டமன்றத் தேர்தலில் 169 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் கன்னியாகுமரி, திருக்கோவிலூர், பரமத்தி வேலூர், பழனி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. இதனால் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.
இந்நிலையில், அதிருப்தி அணியினர் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்ததைத் தொடர்ந்து, அவர்களின் கட்சிப் பதவிகளை பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். பின்னர் சில எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்து பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் அ.தி.மு.க.வின் சட்டமன்ற பலம் 43 ஆகக் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள் பின்னணியை ஆராயணும்! சிபிஐ! அமலாக்கத்துறைக்கு அதிமுக எம்.பி கோரிக்கை!
கடந்த வாரம் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உட்பட 250க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்தனர்.
நேற்று சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், வடசென்னை தெற்கு மாவட்ட செயலர் பாலகங்கா, முன்னாள் எம்.பி.க்கள் வனரோஜா, இளவரசன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் இணைந்தனர். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணியும் த.வெ.க.வில் ஐக்கியமானார்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் த.வெ.க. அல்லது தி.மு.க.வில் இணையும் வாய்ப்புகளை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடர் இணைப்புகள் குறித்து பழனிசாமி இதுவரை பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. “போகிறவர்கள் போகட்டும், இருப்பவர்களுக்கு பதவி கொடுக்க தயாராக இருக்கிறேன்” எனக் கட்சியினரிடம் தெரிவித்து வருகிறார். அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலர் முனுசாமி, “பலன் தேடி செல்பவர்கள் போகிறார்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் பழனிசாமியின் தலைமையில் உறுதியாக நிற்கிறார்கள்” என்றார்.
அ.தி.மு.க.வின் தொடர் சரிவு தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக பலமிழந்து விட்டது! இதுதான் சரியான நேரம்! நிர்வாகிகளுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!