×
 

ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கை க்ளோஸ்..!! ஒரே போடாக போட்ட செல்லூர் ராஜு..!!!

அதிமுகவில் நடக்கும் ஒரு துரும்பைகூட தூணாக்கி விடுகிறார்கள் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் கே.ராஜு, செய்தியாளர்களைச் சந்தித்து அதிமுகவின் தற்போதைய நிலை, எதிர்காலத் தேர்தல் உத்தி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் கூறியதாவது: அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களையோ அல்லது நீக்கப்பட்டவர்களையோ திமுக வரவேற்று அவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி வருவதாகக் குற்றம்சாட்டினார். இது திமுகவின் அரசியல் உத்தியாக இருப்பதாகவும், ஆனால் அதிமுகவில் உள்ள உண்மையான தொண்டர்களின் மதிப்பு வேறு வகையானது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அதிமுக தலைமையில் செயல்படும் என்றும் உறுதிப்படத் தெரிவித்தார். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, அவர் தகுதியற்ற வகையில் பேசி வருவதாகவும், அவரது அரசியல் வாழ்க்கை இப்போதே முடிவுக்கு வந்துவிட்டது என்றும் கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா காலத்தில் சட்டசபையில் அவரது சேலையைப் பிடித்து அவமானப்படுத்திய சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவைக் காட்டிக் கொடுத்தவர் என்று குற்றஞ்சாட்டினார். 2021 முதல் அவர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசி வருவதாகவும், இதனால் தன்னுடன் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் இறுதியில் ஒலிபரப்பப்பட்ட ஒரு பாடல் குறித்து கூட்டணிக் கட்சிகள் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டி, அது ஆபரேட்டர் தவறால் நடந்தது என்றும், அதைப் பெரிதுபடுத்துவது தேவையில்லை என்றும் கூறினார்.

அதிமுகவில் சிறிய சம்பவத்தையும் பெரிதுபடுத்தி தூணாக்கி விடுவதாகவும், ஆனால் திமுகவில் பெரிய சம்பவங்களைக் கூட சிறுமைப்படுத்தி துரும்பாக்கி காட்டுவதாகவும் ஒப்பிட்டு விமர்சித்தார். திமுகவின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு மக்களால் புரிந்து கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, அதிமுகவின் ஒற்றுமை மற்றும் வலிமையை வலியுறுத்திய செல்லூர் ராஜு, திமுக ஆட்சியை மக்கள் மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் கட்சி பணிகளில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

இதையும் படிங்க: ராஜ கண்ணப்பன் ஒரு பச்சோந்தி.. வைகோவிற்கு ஞாபக மறதி...!  செல்லூர் ராஜு அதிரடி பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share