அதிமுகவில் மாஸ்டர் விக்கெட்! தவெக பெரிய சம்பவம்! முதல்வர் விஜய் உடன் கைகோர்க்க தயாரான மாஜிக்கள்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், தங்கள் ஆதரவாளர்களுடன், வரும் 29ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் வரும் 29ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணைப்பு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்யபாமா, மதுராந்தகம் மரகதம், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த நிலையில், கட்சியின் மாவட்ட செயலர்கள் முதல் கிளை நிலை வரை பலர் த.வெ.க.வை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதற்கிடையே விராலிமலை எம்.எல்.ஏ.வாக இருந்த சி.விஜயபாஸ்கர் கடந்த வாரம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவரும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் 29ஆம் தேதி இணைய உள்ளனர்.
த.வெ.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “குட்கா ஊழல் மற்றும் சொத்து குவிப்பு வழக்குகள் இருந்தாலும், முதல்வர் விஜயைச் சுற்றியுள்ள பவர் சென்டர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் விஜய் ஒப்புதல் அளித்தார். மேலும் பல முக்கிய அ.தி.மு.க. பிரமுகர்களை இழுக்கும் பொறுப்பு விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?
29ஆம் தேதி சென்னையில் நடக்கும் இணைப்பு விழாவுக்கு புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களிலிருந்து 10,000க்கும் மேற்பட்டோரை அழைத்து வர த.வெ.க. திட்டமிட்டுள்ளது. இதனிடையே முன்னாள் அமைச்சர் சண்முகம் உள்ளிட்டோருடனும் பேச்சு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்துக்குப் பிறகு முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி ஏற்படுத்திய சுவாரஸ்ய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழனிசாமி அமர்ந்திருந்த பகுதியைத் தவிர்த்து வராண்டா வழியாக வந்த வேலுமணி, முதல்வருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் கரூர் விஜயபாஸ்கரும் வாழ்த்து தெரிவித்தார்.
அ.தி.மு.க.வில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், த.வெ.க.வின் வலிமை அதிகரிப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: இபிஎஸ் உடன் சண்டையா? சமாதானமா?... இரவோடு இரவாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எடுத்த அதிரடி முடிவு...!