திமுகவை சாய்க்க இபிஎஸ் திட்டம்! களமிறங்கும் புதிய படை! ஒவ்வோரு ஓட்டுச்சாவடிக்கும் ஸ்கெட்ச் போடும் எடப்பாடி!
அ.தி.மு.க., சார்பில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 20 பேர் கொண்ட 'மகளிர் பிரசார குழு' அமைக்க அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் தீவிர தேர்தல் தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் 20 பேர் கொண்ட 'மகளிர் பிரசார குழு' அமைக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த மகளிர் குழு, தேர்தல் அறிவிப்பு வெளியானதும் உடனடியாக களத்தில் இறங்கி, வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ளும்.
அதிமுக ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்துவது, மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக நீட்டிப்பது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டங்கள் மகளிர் வாக்காளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதால், திமுக தரப்பும் அதிர்ச்சியடைந்து, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் 10 மகளிர் கொண்ட குழுக்களை அமைத்து பிப்ரவரி 1 முதல் திண்ணை பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிகவும், ஓபிஎஸ்-உம் கட்டாயம் வேணும்! எடப்பாடி பழனிசாமி அதிமுகவினர் ரிக்வெஸ்ட்! தேர்தல் பார்முலா!
இந்நிலையில், அதிமுக தலைமை இன்னும் ஒரு படி முன்னால் சென்று, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் 20 மகளிர் கொண்ட பிரசார குழுவை நியமிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவினர், ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, அதிமுகவின் வாக்குறுதிகளையும், திமுக ஆட்சியின் குறைகளையும் விளக்கி பிரசாரம் செய்ய வேண்டும்.
இதுதவிர, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் புதிதாக 20 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் 10 ஆண்கள், 7 பெண்கள், 3 ஐ.டி. விங் உறுப்பினர்கள் இடம்பெறுவர். இதன்மூலம் ஒரு ஓட்டுச்சாவடிக்கு மொத்தம் 40 பேர் (20 மகளிர் + 20 பூத் கமிட்டி) களமிறக்கப்படுகின்றனர்.
இந்த பணி, பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி, இடைப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய எட்டு தொகுதிகளில் வளர்பிறை வசந்த பஞ்சமி நாளான நேற்று முன்தினம் தொடங்கியது.
ஏற்கனவே பூத் ஏஜெண்ட் பட்டியல் (பி.எல்.ஏ.-2) தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மகளிர் குழு மற்றும் பூத் கமிட்டிகள் மூலம் வீடு வீடாக பிரசாரம் செய்ய ஒரு நபருக்கு 10 வீடுகள் என்ற வீதத்தில் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்று ஓட்டுச்சாவடிகளுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு, அவர்கள் ஒன்றியம், நகரம், பேரூர், மாவட்ட செயலர்களுக்கு தேர்தல் பணி குறித்த தகவல்களை அனுப்புவர். சிறப்பாக செயல்படும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இந்த மகத்தான மகளிர் பிரசார உத்தி, திமுகவின் 10 பேர் குழுவுக்கு எதிரான பதிலடியாக பார்க்கப்படுகிறது. மகளிர் வாக்காளர்களை கவரும் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுகவின் இந்த அதிரடி தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் ஸ்டாலின்!! அதிமுக, பாஜக, தவெகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! திமுக மாஸ் ப்ளான்!