நக்சல் தொல்லை இனி இல்லை!! நாட்டிற்கே விடுதலை!! சொன்னதை செய்து முடித்ததாக அமித்ஷா அறிவிப்பு!
நக்சல் ஆதிக்கத்தை மார்ச் 31க்குள் முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக, லோக்சபாவில் விவாதம் நடந்தது.
புது டெல்லி: நாட்டில் நக்சல் (மாவோயிஸ்ட்) பிரச்சினையை மார்ச் 31-ம் தேதிக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நிர்ணயித்த இலக்கு நெருங்கும் நிலையில், லோக்சபாவில் நேற்று இது தொடர்பான விவாதம் நடைபெற்றது.
எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நம் நாடு நக்சல் பிரச்சினையில் இருந்து விடுதலை பெற்றுள்ளது. நக்சல்களின் கடைசி கோட்டையாக இருந்த சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதி இப்போது வளர்ச்சியின் பாதைக்கு திரும்பியுள்ளது” என்று தெரிவித்தார்.
அமித் ஷா பேசுகையில், “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால் நக்சல் பிரச்சினையை தீர்க்க அக்கட்சி தவறிவிட்டது. இதனால் சுமார் 20,000 இளைஞர்கள் உயிரிழந்தனர். 12 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்” என்று குறிப்பிட்டார். மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வளர்ச்சித் திட்டங்களை தீவிரப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: 1,100 வெடிகுண்டு மிரட்டல்!! நாட்டையே கதிகலங்க செய்த கயவன்! வேலை கிடைக்காத விரக்தியில் செய்ததாக வாக்குமூலம்!
பஸ்தார் பகுதியில் தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து கிராமங்களிலும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. மருத்துவ வசதிகள், ஆதார் அட்டை வழங்கல் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன என்று அமித் ஷா விளக்கினார்.
“நக்சல் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மார்ச் 31 இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் பெரும்பகுதி பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள சில இறுதிக் கட்ட நடவடிக்கைகள் விரைவில் முடிவடையும். அதன் பிறகு முறையான அறிவிப்பு வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.
நக்சல் பிரச்சினைக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு முக்கியப் பங்கு வகித்துள்ளது என்று அமித் ஷா பாராட்டினார். “சிவப்பு பயங்கரவாதத்தின் நிழல் அகன்றுவிட்டது. பஸ்தார் இப்போது வளர்ச்சியை நோக்கி செல்கிறது” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல தசாப்தங்களாக தொடர்ந்து வந்த நக்சல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பார்க்கப்படும் இந்த நிலை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இலக்கு நெருங்கும் வேளையில், லோக்சபாவில் நடைபெற்ற விவாதம் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நக்சல் பாதிப்பு நீங்கிய பகுதிகளில் அமைதியும் வளர்ச்சியும் நிலவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மத்திய அரசு அறிவிக்கும் இறுதி அறிவிப்புக்காக நாடு முழுவதும் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: மணிப்பூர்: அதிரடி சோதனையில் இறங்கிய இந்திய ராணுவம்..!! 17 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!!