மோடி சாதாரண ஆள் கிடையாது!! 'நமோத்சவ்' நிகழ்ச்சியில் அமித் ஷா வெளியிட்ட உண்மை தகவல்கள்!
நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய நலன் மீது கொண்ட பற்று காரணமாக உயர் பதவியை அடைந்தவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார்.
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சன்ஸ்கர்த் மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'நமோத்சவ்' கலாசார நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (டிசம்பர் 28) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 150 கலைஞர்கள் பங்கேற்று சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டினார். “நமோத்சவ் என்பது ஒரு கலாசார நிகழ்ச்சி மட்டுமல்ல. இது இந்தியாவின் தன்னம்பிக்கையையும் உறுதியையும் உள்ளடக்கியது.
கடந்த 11 ஆண்டுகளில் 140 கோடி இந்தியர்களிடம் நாடு உலகில் முதலிடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய தலைவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. செயல், திட்டமிடல், ஒருவர் தன் வாழ்க்கையை முழுமையாக நாட்டுக்காக அர்ப்பணிக்கும்போதுதான் இது சாத்தியமாகும்” என்றார்.
இதையும் படிங்க: விஜய், ஸ்டாலின் கனவு பலிக்காது? யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது! தமிழகத்தில் தொங்கு சட்டசபை? : அமித் ஷா கணிப்பு
மேலும், “பிரதமர் மோடி ஒரு சாதாரண தலைவர் அல்ல. உறுதியான நிலைப்பாடு கொண்ட அசாதாரண ஆளுமை. நேர்மை, வெளிப்படைத்தன்மை, தேசிய நலன் மீதான பற்று காரணமாக மிக உயர்ந்த பதவியை அடைந்த ஒரே தலைவர் மோடி மட்டும்தான்.
ஏழ்மையான குடும்பத்தில் தொடங்கிய அவர் இன்று 29 நாடுகளின் மிக உயரிய விருதுகளைப் பெற்ற பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இது 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம்” என்று அமித் ஷா புகழாரம் சூட்டினார்.
கடந்த 11 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு 27 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாகவும், வீடு, இலவச கியாஸ் இணைப்பு, கழிப்பறை, சுத்தமான குடிநீர், வங்கிக் கணக்கு போன்ற பல திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “நமோத்சவ் இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும்” என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி பிரதமர் மோடியின் பங்களிப்புகளை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை பயணத்தில் மோடியின் பங்கை வலியுறுத்தும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வந்திருச்சு க்ளைமாக்ஸ்!! இறுதிகட்டத்தை எட்டியது நக்சல் ஒழிப்பு! அமித்ஷா தீவிர நடவடிக்கை!