×
 

தமிழகத்திற்கான முன்னுரிமை தொடர வேண்டும்! மாநிலத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது - அன்புமணி!

மத்திய மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: தமிழகத்துக்கு மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இந்தப் புதிய முடிவு தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மின்அமைச்சகம், மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக போட்டி ஏல முறையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனால், மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கும் முறையை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மாநிலங்களின் மின்தேவையை பெரிதும் பாதிக்கும். மேலும், மாநிலங்களின் உரிமையையும் பறிக்கும் செயல் என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 20,444 மெகாவாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த அனல் மின் நிலையங்களில் இருந்து வெறும் 2,857 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகிறது. மீதமுள்ள பெரும் பகுதியை மத்திய மின்னுற்பத்தி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டியுள்ளது.

இதையும் படிங்க: அன்புமணி பிரசாரத்தில் புகுந்த வீரப்பன் மகள்! சேலத்தில் திடீர் பரபரப்பு!! வித்யா ராணி கைது!

குறிப்பாக, தமிழ்நாட்டில் அமைந்துள்ள வள்ளூர், என்எல்சி, எண்ணூர், தூத்துக்குடி, கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் உள்ளிட்ட மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து தற்போது 6,998 மெகாவாட் மின்சாரம் முன்னுரிமை அடிப்படையில் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் மின்சாரத்தை விட மிகவும் மலிவானது.

மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் மின்சாரத்தை போட்டி ஏல முறைக்கு மாற்றினால், மின்சார விலை கணிசமாக உயரும். ஏற்கனவே ரூ.45,000 கோடி மின்கட்டண உயர்வை சுமந்து கொண்டு நஷ்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இது மேலும் பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும். இறுதியில் மக்கள் மீது மற்றொரு மின்கட்டண உயர்வு சுமத்தப்படும் நிலை ஏற்படும் என்று அன்புமணி எச்சரித்தார்.

மத்திய மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க நிலம் வழங்குவது, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளை சுமப்பது ஆகியவை மாநில மக்களின் பொறுப்பு என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, “இந்தப் பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்களுக்கு முன்னுரிமை உரிமை மறுக்கப்படுவது நியாயமற்றது” என்றார்.

கடலூர், கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதை சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசு தனது முடிவை கைவிட்டு, தற்போதுள்ள முன்னுரிமை முறையைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: எம்.எல்.ஏ சீட் தர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!! பாமக ராமதாஸ் பேரன் பரபரப்பு ஆடியோ! சிக்கலில் அன்புமணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share