×
 

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

கும்மிடிப்பூண்டி சிறுமி உயிரிழப்பு: போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தின் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!

மேலும், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், அவர்கள் போதைப் பொருட்களின் தாக்கத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்வதாகவும், சிறு குழந்தைகள் கூட பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு பள்ளி மாணவி ஒருவருக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றச் சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ள அன்புமணி, அந்த வழக்கில் பா.ம.க. போராட்டம் நடத்திய பின்னரே குற்றவாளி கைது செய்யப்பட்டதாகவும், விரைவான விசாரணைக்குப் பிறகு தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் அரசு மற்றும் காவல்துறை உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விவாகரத்தாகிறாரா விஜய்?... விஜய் - சங்கீதா விவகாரத்தில் இன்று அரங்கேறப்போகும் அதிரடி சம்பவம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share