×
 

பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலை!? ‘We The Leaders’ ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

சட்டசபை இடைத்தேர்தலில், பெருந்துறை தொகுதியில் போட்டியிடுவது குறித்து, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியலில் புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை தொகுதியில் அவர் களமிறங்கலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடுத்த கட்டமாக, தனி அரசியல் கட்சியை உருவாக்கி மாநில அரசியலில் வலுவான இடத்தைப் பிடிப்பதே அவரது இலக்காக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, தாராபுரம், விராலிமலை, அம்பாசமுத்திரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலை பல்வேறு அரசியல் கட்சிகள் முக்கியமாகக் கருதி தயாராகி வருகின்றன.

இதையும் படிங்க: அண்ணாமலையின் முதல் போராட்டம்?! களத்தில் இறங்கும் We the Leaders! திருச்செந்தூரில் காத்திருக்கும் சம்பவம்!

இந்த சூழலில், கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்டு அரசியல் செல்வாக்கை வளர்க்கும் நோக்கில் பெருந்துறை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருந்துறையில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எவ்வளவு உள்ளது, குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகளை பெற முடியுமா, தேர்தலில் பணபலம் மற்றும் அதிகார பலம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனநிலையும், கொங்கு மண்டலத்தின் அரசியல் போக்கும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், பெருந்துறை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: ரீல்ஸ்- ஆ முக்கியம்..! CM விஜயே இதை ஏத்துக்க மாட்டாரு..! கொந்தளித்த அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share