இனி எப்போதும் பட்ஜெட் வாசிக்கும் தொல்லை இல்லை!! ஏமாற்றுவதை விடவில்லை! திமுகவை விளாசும் அண்ணாமலை!!
'அப்பாடா, இதை விரைவில் முடித்து விட்டால், இனி எப்போதும் நமக்கு இந்த பட்ஜெட் அறிக்கை வாசிக்கும் தொல்லை இருக்காது என்பது போல் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். “கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு மக்களை ஏமாற்றி வந்தது. இறுதி பட்ஜெட்டிலும் அந்த ஏமாற்றத்தைத் தொடர்கிறது” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை அவசர அவசரமாக வாசித்ததை சுட்டிக்காட்டி, “அப்பாடா… இதை விரைவில் முடித்துவிட்டால் இனி பட்ஜெட் வாசிக்கும் தொல்லை இருக்காது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பொழுது போக்கலாம் என்ற நிம்மதிப் பெருமூச்சு தெரிகிறது” என்று கிண்டலடித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், போதைப்பொருள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் உள்ளிட்ட எந்த தரப்பு மக்களின் கோரிக்கையையும் கண்டுகொள்ளாமல், பொய்களை மட்டுமே பேசியதாக அவர் குற்றம் சாட்டினார். கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியில் படிக்கும் குழந்தைகள், அடிப்படை வசதியற்ற மாணவர் விடுதிகள், பள்ளிகளில் பெருகும் போதைப்பொருள் கலாச்சாரம் ஆகியவை குறித்து எந்த அக்கறையும் இல்லை என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: குவாரிகளால் அழியும் கிராமங்கள்!! முகமூடியுடன் வந்த வீரர்கள்!! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை!
மிக முக்கியமாக, வரும் மார்ச் 31, 2027-ல் தமிழகத்தின் மொத்த கடன் 10,62,248 கோடி ரூபாயாக உயரும் என்ற தகவலை சுட்டிக்காட்டி, “இத்தனை லட்சம் கோடி கடன் எதற்காக வாங்கப்பட்டது? எங்கே சென்றது அந்த பணம்?” என்ற கேள்வியை எழுப்பினார். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, புதிய திட்டங்கள் எதுவும் இல்லை, அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ திட்டத்தை திமுக வேண்டுமென்றே தடுத்ததாகவும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நான்கு மாதங்களாக சமர்ப்பிக்காமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார். “மெட்ரோ வர வேண்டும் என்ற அக்கறை திமுகவுக்கு இல்லை. மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவதற்காக மட்டுமே இந்த நாடகம்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், கருணாநிதி காலத்திலிருந்து தொடரும் “கூவம் சுத்தம், அடையாறு சுத்தம்” என்ற நகைச்சுவை ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அடையாறு சுத்தத்துக்கு ஆண்டுக்கு 1,500 கோடி ஒதுக்கிய நிதி எங்கே போனது என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த விமர்சனம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக அரசின் நிதி நிர்வாகம் மீதான விவாதத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. அண்ணாமலையின் இந்த கடுமையான தாக்குதல் NDA கூட்டணியின் பிரசாரத்துக்கு புது வேகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.10.62 லட்சம் கோடிப்பே!!! அம்மாடியோவ்!! தாறுமாறாக அதிகரிக்கும் தமிழக அரசின் கடன்! இடைக்கால பட்ஜெட்?!