தனிக்கட்சியா? பாஜகவா?... இறுதி முடிவெடுத்த அண்ணாமலை... நாளை வெளியாகிறது அறிவிப்பு?
மதச்சார்பற்ற கொள்கையுடன் முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் நீண்டகாலமாகக் குமுறிக் கொண்டிருந்த உட்கட்சி மோதல் இப்போது டெல்லி உயர்மட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே. அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த பின்னர், அவரைத் தக்கவைக்க அல்லது சமரசம் செய்ய கட்சி மேலிடம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை தொடர்ந்து பாஜகவில் இருப்பாரா அல்லது புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்வாரா என்பதே தற்போதைய பெரும் கேள்வியாக உள்ளது.
2020-ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை, தனது அதிரடி அணுகுமுறை மூலம் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே வேகமான செல்வாக்கைப் பெற்றார். 'என் மண் என் மக்கள்' யாத்திரை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கட்சியை இளமையாக்கினார். இருப்பினும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 2026 தேர்தலில் வாக்கு சதவீதம் 11 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைந்தது. இதற்கு கூட்டணி முடிவு, தலைமைப் பொறுப்பு மாற்றம் உள்ளிட்டவற்றை அண்ணாமலை ஆதரவாளர்கள் காரணமாகச் சுட்டிக்காட்டினர்.
2025-ல் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தார். தேர்தல் வாய்ப்பு மறுப்பு, மூத்த தலைவர்களின் திட்டமிட்ட ஒதுக்குதல், நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட புகார்களுடன் ஐந்து பக்கங்கள் கொண்ட விரிவான மனுவை டெல்லியில் சமர்ப்பித்தார். அதில் அதிமுக கூட்டணி உள்ளிட்ட முடிவுகளை விமர்சித்ததுடன், மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் மீதான புகார்களையும் ஆதாரங்களுடன் முன்வைத்ததாகத் தெரிகிறது. டெல்லி செல்லும் முன்பு தனது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிய செயலும் பெரும் ஊகங்களுக்கு வித்திட்டது.
இதையும் படிங்க: தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்த அண்ணாமலை...? - தேனி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!
இதற்கிடையே நேற்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து கட்சியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பாஜக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை தலைமை ஏற்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனிடையே இன்று அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். சில இடங்களில் அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் பாஜகவிலேயே தொடர வேண்டும் என்றும் விதவிதமான வாசகங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மதச்சார்பற்ற கொள்கையுடன் முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தலைமை அவரது முடிவை மாற்ற முயன்ற போதிலும் அவர் கட்சியிலிருந்து விலகுவதில் உறுதியாக இருந்ததோடு மாற்று அரசியலை முன்வைத்து புதிய கட்சி தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சமாதானப்படுத்த போராடும் பாஜக தலைவர்கள்..!! மனம் இறங்கி வருவாரா அண்ணாமலை..??