சமூக மாற்றத்திற்காக பணிகளை துவங்குங்கள்; வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை அழைப்பு
சமூக மாற்றத்திற்கான பயணத்தைத் தொடங்குமாறு 'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு அதன் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
'வீ தி லீடர்ஸ்' மக்கள் இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்கள் அனைவரும் சமூக மாற்றத்திற்கான பயணத்தை தங்களது பகுதியில் தொடங்க வேண்டும் என்று அதன் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக பங்கேற்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகிய பிறகு, அண்ணாமலை 'வீ தி லீடர்ஸ்' என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். போதை இல்லா தமிழகம் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த இயக்கம், குறுகிய காலத்திலேயே பல லட்சம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இயக்கத்தில் இதுவரை 19 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் புதிய உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து வருவதால், இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் வேகமாக விரிவடைந்து வருகிறது.
இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றும் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன் முதல் மாநில மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிலையில், ஜூலை 26-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது மாநாடு, பின்னர் தேதி மாற்றப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: அக்டோபர் 15! அண்ணாமலையின் புதிய திட்டம்! அப்துல் கலாம் பிறந்தநாளில் தொடங்கும் ‘அரசியல் அறநெறி மையம்’!
நமது @WTLFoundation செயலியை பதிவிறக்கம் செய்து, எப்படிப் பயன்படுத்துவது என்பதை, இந்தக் காணொளியில் எளிமையாக விளக்கியுள்ளோம்.
— K.Annamalai (@annamalai_k) July 29, 2026
இதனைப் பார்த்து, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்! சமூக மாற்றத்திற்கான தலைமைப்… pic.twitter.com/fpanshKEWD
இந்த சூழலில், 'வீ தி லீடர்ஸ்' செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கும் வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி தங்களது பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பணிகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சமூக மாற்றத்திற்கான தலைமைப் பயணத்தை ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது ஊரில் தொடங்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பையும் தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, அதிகமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த இயக்கத்தில் இணைந்து சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வரவிருக்கும் தூத்துக்குடி மாநாட்டை முன்னிட்டு இயக்கத்தின் செயல்பாடுகள் மேலும் தீவிரமடையும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு என்ன ஆச்சு?... கலாம் நினைவிடத்தில் நின்று சொன்ன ஷாக்கிங் வார்த்தை... ஆடிப்போன அரசியல் களம்...!