×
 

வீ தி லீடர்ஸ் பாய்ச்சல்! கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரை மெகா திட்டம்! அண்ணாமலையின் அடுத்த அதிரடி!

வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை துவங்கிய இருக்கும் அண்ணாமலை, ஒரு மாபெரும் கடற்கரை தூய்மைப் பணியைத் துவங்கி வைப்பதற்கு தென் கடலோர மாவட்டங்களுக்குச் செல்ல உள்ளார்.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதியதாக தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் மூலம் அடுத்தகட்ட சமூகப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தற்போது கடற்கரை தூய்மை இயக்கத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

அண்ணாமலை தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு, அரசியல் சாராத சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கடந்த ஜூலை மாதம் முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மாரத்தான், நடைபயிற்சி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாக வைத்து கடற்கரை தூய்மை இயக்கத்தை அண்ணாமலை தொடங்க உள்ளார். இதற்காக ஆகஸ்ட் 2 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு செல்லும் அவர், கன்னியாகுமரி கடற்கரை சாலையில் இருந்து இந்த மெகா தூய்மை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை... கட்சி பெயர், கொடி, ரெடி! செப்டம்பரில் பிரம்மாண்ட மாநாடு?

இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் உவரி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மற்றும் திருச்செந்தூர் பகுதிகளிலும் கடற்கரை தூய்மை பணிகள் தொடங்கப்பட உள்ளதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பயணத்தின் போது அண்ணாமலை, உள்ளூர் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். கடல் மாசுபாட்டை குறைப்பது, சுற்றுலா மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாப்பது ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் அதிக அளவில் தன்னார்வலர்கள் இணைந்துள்ளதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தென் மாவட்டங்களில் இந்த தூய்மை இயக்கத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.,வில் இருந்து விலகிய பிறகு அண்ணாமலை தொடங்கியுள்ள இந்த அமைப்பு, சமூகப் பணிகள் மூலம் தனது கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு முன்பாக, மக்கள் மத்தியில் தனது அமைப்பின் செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியாகவும் இதை சிலர் பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share