அதிரடி அண்ணாமலை மிஸ்ஸிங்? We The Leaders-ல் நிர்வாகிகள் புலம்பல்! இளைஞர்களிடம் அதிருப்தி!
அதிரடி அரசியலை அண்ணாமலை கைவிட்டதால், அவருடைய 'வீ தி லீடர்ஸ்' அமைப்பில், இளைஞர்கள் விரக்தியில் உள்ளதாக நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
சென்னை: பா.ஜ.,வில் இருந்து விலகிய பின்னர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘We The Leaders’ இயக்கம் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், இயக்கத்தில் இணைந்த இளைஞர்கள் மத்தியில் தற்போது அதிருப்தி நிலவி வருவதாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.,வில் இருந்தபோது தினசரி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேட்டிகள், விமர்சனங்கள் மற்றும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் அண்ணாமலை ஈடுபட்டு வந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். அந்த பாணியையே எதிர்பார்த்து புதிய இயக்கத்தில் இணைந்த இளைஞர்களுக்கு, தற்போதைய செயல்பாடுகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
‘We The Leaders’ இயக்கம் கடந்த ஜூன் மாதம் அரசியல் இயக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்காலத்தில் இது அரசியல் கட்சியாக மாறும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் பொள்ளாச்சியில் இயக்கத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அடுத்தகட்டமாக பல்வேறு பகுதிகளில் அமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் மரங்கள்! அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மாபெரும் பசுமை புரட்சி!
இந்த நிலையில், மாவட்ட அளவில் நிர்வாகிகள் உள்ளிட்ட அமைப்பு கட்டமைப்புகள் முழுமையாக அறிவிக்கப்படாதது சில இளைஞர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அண்ணாமலை நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் பா.ஜ.,வில் இருந்து வந்த மூத்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், தங்களைப் போன்ற புதிய இளைஞர்களுக்கு போதிய இடம் கிடைப்பதில்லை என்றும் சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, சிலர் சமூக வலைதளங்களில் இயக்கத்துடன் தொடர்புடைய தங்களது அடையாளங்களை மாற்றியுள்ளதாகவும், சிலர் அமைப்பில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இத்தகவல்களுக்கு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தரப்பில் உறுதியான விளக்கம் வெளியாகவில்லை.
மறுபுறம், ‘We The Leaders’ அமைப்பு ஆரம்ப கட்டத்திலேயே பெரிய அளவில் உறுப்பினர்களை ஈர்த்தது. தொடங்கிய சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் இயக்கத்தில் இணைந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.
அதே நேரத்தில், அண்ணாமலை உடனடியாக தேர்தல் அரசியலில் குதிப்பதற்குப் பதிலாக அமைப்பை கட்டமைக்கும் அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். 2031-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே இலக்கு என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால், உடனடி அதிரடி அரசியலை எதிர்பார்க்கும் இளைஞர்களின் மனநிலைக்கும், நீண்டகால அமைப்பு கட்டமைப்பை முன்னிறுத்தும் அண்ணாமலையின் அணுகுமுறைக்கும் இடையே முரண்பாடு உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் மாதங்களில் இயக்கத்துக்குள் நிர்வாக கட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதே இதற்கான விடையை தீர்மானிக்கக்கூடும்.
இதையும் படிங்க: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை! அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' உறுப்பினர் சேர்க்கையில் புதிய முறை!